39 ஓட்டங்களுக்கு சுருண்டது கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

199
UPLOAD - Tamil - SLC Premier League - Tier 'A'

பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான சூப்பர் 8 போட்டியொன்றில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை படுதோல்வியடையச் செய்த சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

மேலும் மூன்று சூப்பர் 8 போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றதுடன், தட்டு (Plate) பிரிவிற்கான மூன்று போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்தன.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)

எதிரணி முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட 150 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணி, நேற்றைய தினம் 5 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்று மத்திய வரிசை மற்றும் கீழ்வரிசை வீரர்கள் பொறுப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 196 ஆக அதிகரித்தனர். தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து அணிக்கு திரும்பியிருந்த திக்ஷில டி சில்வா அதிகபட்சமாக 44 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் இஷான் ஜயரத்ன மற்றும் அகில தனஞ்சய 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

46 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறிய நிலையில் வெறும் 39 ஓட்டங்களுக்கே சுருண்டது. சதீர சமரவிக்ரமவை (16) தவிர மற்றைய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் மலிந்த புஷ்பகுமார 4 விக்கெட்டுக்களையும், இசுரு உதான மற்றும் மதுக லியனபதிரனகே தலா 3 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர். இதன்படி நான்கு தினங்கள் இடம்பெறவிருந்த போட்டி ஒன்றரை நாளில் நிறைவு பெற்றதுடன், சிலாபம் மேரியன்ஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களினால் இலகு வெற்றியை சுவீகரித்தது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 150 (46.5) – சதீர சமரவிக்ரம 29, அரோஷ் ஜனோத 7/38

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 196 (49.5) – திக்ஷில டி சில்வா 44, ருக்ஷான் ஷெஹான் 36, அகில தனஞ்சய 3/11, இஷான் ஜயரத்ன 3/46

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 39 (13.4) – சதீர சமரவிக்ரம 16, மலிந்த புஷ்பகுமார 4/03, மதுக லியனபதிரனகே 3/02, இசுரு உதான 3/09

முடிவு: சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்  – 17.98
  • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 2.45

SSC கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம் (சூப்பர் 8)

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ விளையாட்டுக் கழகம் 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், அடுத்து களமிறங்கிய SSC அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்று அவ்வணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக 92 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததுடன், இளம் வீரர் சரித் அசலங்க 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்படி SSC கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 323 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்துவீச்சில் இராணுவ அணித்தலைவர் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

95 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இராணுவ விளையாட்டுக் கழகம், ஒரு கட்டத்தில் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் பொறுப்பாக துடுப்பெடுத்தாடி அணியை மீட்ட சீக்குகே பிரசன்ன ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதன்படி அவ்வணி 5 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுள்ளது. பந்துவீச்சிலும் திறமையை வெளிக்காட்டிய SSC அணியின் தசுன் ஷானக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 228 (67.3) – டில்ஷான் டி சொய்சா 74, சீக்குகே பிரசன்ன 40, சச்சித்ர சேனநாயக்க 4/43, கசுன் மதுஷங்க 3/29

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (81.5) – தசுன் ஷானக 92, சரித் அசலங்க 50, சீக்குகே பிரசன்ன 3/84

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 51/5 (21) – சீக்குகே பிரசன்ன 31*, தசுன் ஷானக 3/16

நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)

தரங்க பரணவிதான மற்றும் தினித் திமோத்ய ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் முதல் தினம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ஓட்டங்களை பெற்றிருந்த தமிழ் யூனியன் அணி, இன்று 318 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ராகம அணி சார்பாக சதுர பீரிஸ் மற்றும் அமில அபொன்சோ தலா 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் எதிரணிக்கு சளைக்காது அபாரமாக துடுப்பெடுத்தாடியது. சதங்கள் கடந்த நிலையில் ஜனித் லியனகே (104*) மற்றும் லஹிரு மிலந்த (100*) ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர். இதன்படி அவ்வணி 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 318 (101.5) – தினித் திமோத்ய 113, தரங்க பரணவிதான 109, அமில அபொன்சோ 3/43,  சதுர பீரிஸ் 3/57

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 212/1 (73) – ஜனித் லியனகே 104*, லஹிரு மிலந்த 100*

நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.


NCC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)

NCC அணி பெற்றுக் கொண்ட 200 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக ஆடுகளம் பிரவேசித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் நாள் நிறைவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நேற்று ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களுடன் களத்தில் இருந்த இளம் வீரர் ரொன் சந்திரகுப்த, தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதம் கடந்த நிலையில் 108 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றுமொரு இளம் வீரரான வனிது ஹசரங்க அரைச்சதம் குவித்தார். இதன்படி கொழும்பு கிரிக்கெட் கழகம் 293 ஓட்டங்களை குவித்து 93 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய மற்றும் தரிந்து கௌஷால் 4 விக்கெட்டுகள் வீதம் பதம்பார்த்தனர்.

அடுத்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய NCC அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஜெஹான் முபாரக் 46 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். எஞ்சலோ பெரேரா ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200 (49) – அனுக் பெர்னாண்டோ 43, லஹிரு உதார 40, லஹிரு கமகே 4/52

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (78.2) – ரொன் சந்திரகுப்த 108, வனிது ஹசரங்க 59, தரிந்து கௌஷால் 4/71, லசித் எம்புல்தெனிய 4/110

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 187/5 (49) – ஜெஹான் முபாரக் 46, எஞ்சலோ பெரேரா 43*

நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.


காலி கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம் (தட்டு பிரிவு)

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் புளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய யசோத லங்கா 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 167 ஓட்டங்கள் விளாசினார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய டில்ஹான் குரே 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்படி காலி கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 407 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அசத்திய தினுக ஹெட்டியாராச்சி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த BRC கழகம் எதிரணியை போன்றே அசத்தலாக துடுப்பெடுத்தாடியது. அவ்வணியின் ருமேஷ் புத்திக சதம் குவித்ததுடன், மேலும் நான்கு வீரர்கள் அரைச்சதம் கடந்தனர். இதன்படி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்ட BRC கழகம் போட்டி நிறைவடையும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 447 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்ததுடன், முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கான புள்ளிகளை BRC கழகம் பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 407 (126.5) – யசோத லங்கா 167, டில்ஹான் குரே 82, தினுக ஹெட்டியாரச்சி 7/158

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 447/6 (123) – ருமேஷ் புத்திக 116, லிசுல லக்ஷான் 88, சாணக விஜேசிங்க 74*, திலகரத்ன சம்பத் 56, பானுக ராஜபக்ஷ 51

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • BRC கழகம் – 11.5
  • காலி கிரிக்கெட் கழகம் – 2.9

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)

அடைமழையின் காரணமாக முதல் தினம் 13.1 ஓவர்களே வீசப்பட்ட இப்போட்டி சர்ரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

எனினும் சிறப்பாக செயற்பட்ட எதிரணியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணியின் டிரான் தனபால அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் சோனகர் விளையாட்டுக் கழகத்தின் அனைத்து பந்து வீச்சாளர்களும் திறமையாக பந்துவீசியதுடன், பிரமோத் மதுவந்த அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம் சார்பில் பபசார வடுகே 72 ஒட்டங்களையும் பிரமோத் மதுவந்த ஆட்டமிழக்காது 70 ஒட்டங்களையும் குவித்தனர். மேலும் ஷானுக துலாஜ் மற்றும் கீழ்வரிசை வீரர் சச்சித்ர பெரேரா ஆகியோர் அரைச்சதம் கடக்க, சோனகர் விளையாட்டுக் கழகம் 371 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அசத்திய மலித் டி சில்வா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

219 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த புளூம்பீல்ட் அணி போட்டி நிறைவடையும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடக்க வீரர்களான நிசல் பிரான்சிஸ்கோ மற்றும் லஹிரு ஜயகொடி அரைச்சதம் பெற்று ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 49 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அரைச்சதத்தினை தவறவிட்டார். இதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (49.3) – டிரான் தனபால 30, பிரமோத் மதுவந்த 3/05

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 371 (89.4) – பபசார வடுகே 72, பிரமோத் மதுவந்த 70, சச்சித்ர பெரேரா 52, ஷானுக துலாஜ் 56, மலித் டி சில்வா 6/148

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 201/4 (47) – லஹிரு ஜயகொடி 60, நிசல் பிரான்சிஸ்கோ 51, நிபுன் கருணாநாயக்க 49, பிரமோத் மதுவந்த 2/63

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • சோனகர் விளையாட்டுக் கழகம் – 11.96
  • புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 3.27

பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)

முதல் தினம் மழையின் காரணமாக ஒரு ஓவரேனும் வீசப்படாத நிலையில் இப்போட்டி இரண்டு தினங்களே இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

தனியொருவராக பதுரேலிய அணியை வழிநடத்திய தொடக்க வீரர் பெதும் மதுஷங்க ஆட்டமிழக்காது 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். எனினும் மறுமுனையில் அனைத்து வீரர்களும் ஆட்டமிழக்க, பதுரேலிய விளையாட்டுக் கழகம் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்து வீச்சில் கசுன் ராஜித மற்றும் சுராஜ் ரந்திவ் ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய செரசன்ஸ் அணியின் கமிந்து கனிஷ்க 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கலாக 130 ஓட்டங்களை விளாசினார். மேலும் உமேஷ் கருணாரத்ன துரிதமாக 64 ஓட்டங்கள் பெற்றுக் கொள்ள, செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் பதுரேலிய அணியின் திலேஷ் குணரத்ன 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (91.4 ) – பெதும் மதுஷங்க 110*, ஷெஹான் பெர்னாண்டோ 39, கசுன் ராஜித 3/78, சுராஜ் ரந்திவ் 3/107

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 321/6 (87) – கமிந்து கனிஷ்க 130, உமேஷ் கருணாரத்ன 64, திலேஷ் குணரத்ன 3/48

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 11.11
  • பதுரேலிய விளையாட்டுக் கழகம் – 2.41