ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்த வேண்டாம் – பாக். முன்னாள் வீரர்

223

பாகிஸ்தானில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவது தொடர்பில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சு சகலதுறைவீரரான அப்துல் ரஷாக் ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தான் அல்லாத ஒரு இடத்தில் நடந்தால் சிறப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

மழைக்கு மத்தியில் அபார சதம் விளாசிய லசித் குரூஸ்புள்ளே

ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் இந்த தொடரில் விளையாட பாகிஸ்தான் பயணமாகுவதற்கு இந்திய கிரிக்கெட் அணி மறுப்புத் தெரிவித்திருக்கின்றது. இதனால், ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

இந்த நிலையில் Geo News ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் அப்துல் ரஷாக் ஆசியக் கிண்ணத் தொடரானது பாகிஸ்தான் அல்லாத ஒரு இடத்தில்  நடைபெறுவது கிரிக்கெட்டிற்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் நல்லதாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

”(ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தான் அல்லாத இடத்தில் நடப்பது) அது கிரிக்கெட்டிற்கு நல்லது. கிரிக்கெட் போட்டிகளின் முன்னேற்றத்திற்கும் அது நல்லது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டிகள் ஐ.சி.சி. இன் தொடர்களிலேயே நடைபெறுகின்றன. எனவே ஆசியக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு கொண்டு செல்லப்படுவதே சிறந்த தெரிவு. அத்துடன் அதுவே கிரிக்கெட்டிற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறந்தது.” என்றார்.

அத்துடன் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள் இடையே நீண்ட காலம் நிலவி வருகின்ற பிணக்கினை தீர்ப்பதற்கு இரு சபைகளும் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் அப்துல் ரஷாக் வலியுறுத்தி இருந்ததோடு, இந்தியா இல்லாமல் ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறுவது இந்த தொடரினை பலவீனமாக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கிண்ணம் இலங்கையில் நடந்தால் சிறப்பாக இருக்கும் – அஸ்வின்

இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில்  நடைபெறவுள்ள நிலையில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் ஆசியக் கிண்ணம் முக்கியத்துவமிக்க தொடர்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

விடயங்கள் எவ்வாறு இருந்த போதும் ஆசியக் கிண்ணத் தொடரினை பாகிஸ்தானில் நடாத்துவது தொடர்பிலான இறுதி முடிவு அடுத்த மாதத்தில் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

செய்தி மூலம் : The Indian Expres

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<