இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஆறு போட்டிகள் இன்று நிறைவுபெற்றன. பதுரேலிய விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த SSC கழகம் 10 விக்கெட்டுகளினால் இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

தொடர்ந்து பெய்து வரும் அடைமழையின் காரணமாக குறைவான ஓவர்களே வீசப்பட்ட நிலையில், மற்றைய ஐந்து போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தன.

SSC கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம்

நேற்று முன்தினம் SSC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இளம் வீரர் சம்மு அஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள அவ்வணி 347 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மற்றுமொரு இளம் வீரரான சரித் அசலங்க 66 ஓட்டங்களையும், தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வரும் சச்சித்ர சேனநாயக்க 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அசத்திய அலங்கார அசங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய பதுரேலியா விளையாட்டுக் கழகம், ஜெப்ரி வெண்டர்சேவின் சுழலை எதிர்கொள்ளத் திணறிய நிலையில் 143 ஓட்டங்களுக்கே சுருண்டது. அபாரமாக பந்து வீசிய வெண்டர்சே 44 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். துடுப்பாட்டத்தில் தனித்துப் போராடிய பதுரேலியா அணியின் ஷிரான் ரத்நாயக்க 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அதன்படி 204 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட SSC கழகம் எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதிரடியாக துடுப்பெடுத்தாடியாக சாலிய ஜீவந்த 13 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 129 ஓட்டங்களை விளாசி பதுரேலியா விளையாட்டுக் கழகத்திற்கு நம்பிக்கையளித்தார்.

எனினும் அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழக்க, பதுரேலியா கழகம் 237 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சிலும் திறமையை வெளிக்காட்டிய சச்சித்ர சேனநாயக்க 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், கசுன் மதுஷங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி 34 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய SSC அணி 5.2 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 347 (92.5) – சம்மு அஷான் 95, சரித் அசலங்க 66, சச்சித்ர சேனநாயக்க 62, அலங்கார அசங்க 6/126

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 143 (38.5) – ஷிரான் ரத்நாயக்க 51, ஜெப்ரி வெண்டர்சே 6/44

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 237 (50.2) – சாலிய ஜீவந்த 129, ஷெஹான் பெர்னாண்டோ 38, சச்சித்ர சேனநாயக்க 4/76, கசுன் மதுஷங்க 3/53

SSC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 39/0 (5.2)

முடிவு: SSC கழகம் 10 விக்கெட்டுகளினால் வெற்றி


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் புளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. மேல்வரிசை வீரர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்க, தமிழ் யூனியன் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 314 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மனோஜ் சரத்சந்திர (57) மற்றும் தரங்க பரணவிதான (60) ஆகியோர் அரைச்சதங்கள் குவித்ததுடன், கித்ருவன் விதானகே மற்றும் தினுக் விக்ரமநாயக ஆகியோர் தலா 49 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அரைச்சதங்களை தவறவிட்டனர். பந்து வீச்சில் அசத்திய ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல (5/102) மற்றும் மலித் டி சில்வா (4/66) ஆகியோர் தமக்கிடையே 9 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக 115 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் நிசல் பிரான்சிஸ்கோ அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் தமிழ் யூனியன் அணியின் ரமித் ரம்புக்வெல்ல 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 199 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. வேகமாக ஓட்டங்களை குவிப்பதில் கவனம் செலுத்திய அவ்வணி 21 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்துவீச்சில் சிறப்பித்த மலித் டி சில்வா 4 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

அதன்படி புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகத்திற்கு 320 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை நோக்கி ஆடுகளம் பிரவேசித்த புளூம்பீல்ட் அணியினர் ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் நிபுன் கருணாநாயக்க 62 ஓட்டங்களையும் லஹிரு ஜயகொடி 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 314 (87.3) – தரங்க பரணவிதான 60, மனோஜ் சரத்சந்திர 57, கித்ருவன் விதானகே 49, தினுக் விக்ரமநாயக 49*, சித்தர கிம்ஹான் 46,  ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல 5/102, மலித் டி சில்வா 4/66

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 115 (37.2) – நிசல் பிரான்சிஸ்கோ 45, ரமித் ரம்புக்வெல்ல 4/38

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 120/6d (21) – சாமிக கருணாரத்ன 38,  மலித் டி சில்வா 4/26

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 172/4 (63) – நிபுன் கருணாநாயக்க 62, லஹிரு ஜயகொடி 53

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


NCC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

NCC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

அதிரடியாக ஆடிய எஞ்சலோ பெரேரா (139*) மற்றும் சந்துன்  வீரக்கொடி (110) சதங்கள் விளாச, NCC அணி தமது முதல் இன்னிங்சில் 370 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் ஷாலிக கருணாநாயக்க மற்றும் ரொஷான் ஜயதிஸ்ஸ ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த காலி கிரிக்கெட் கழகம் சதுரங்க டி சில்வாவின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக 170 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் தமித ஹுனுகும்புர அதிகபட்சமாக 66 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அசத்திய சதுரங்க டி சில்வா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்படி 200 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட NCC கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. வெற்றி ஒன்றைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், ஆட்டத்தை இடைநிறுத்தாது தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த எஞ்சலோ பெரேரா 81 ஓட்டங்களையும், சகலதுறையிலும் கைவரிசையை காட்டிய சதுரங்க டி சில்வா 86 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். மீண்டும் காலி கிரிக்கெட் கழகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரொஷான் ஜயதிஸ்ஸ 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 370 (83.5) – எஞ்சலோ பெரேரா 139*, சந்துன் வீரக்கொடி 110, தரிந்து கௌஷால் 43, ஷாலிக கருணாநாயக்க 4/74, ரொஷான் ஜயதிஸ்ஸ 4/117

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 170 (61.1) – தமித ஹுனுகும்புர 66, யஷோத லங்கா 43, சதுரங்க டி சில்வா 6/67

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 330 (75.5) – சதுரங்க டி சில்வா 86, எஞ்சலோ பெரேரா 81, சந்துன் வீரக்கொடி 43, ரொஷான் ஜயதிஸ்ஸ 5/153, யஷோத லங்கா 3/25

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இப்போட்டி சோனகர் கழக மைதானத்தில் ஆரம்பமானதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அவ்வணியின் தொடக்க வீரர் இரோஷ் சமரசூரிய 85 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் பிரமோத் மதுவந்த மற்றும் சச்சித்ர பெரேரா ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த சோனகர் விளையாட்டுக் கழகம், கீழ்வரிசை வீரர் திலான் துஷாரவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 256 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. திலான் துஷார 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பபசர வடுகே 52 ஓட்டங்களை குவித்தார். பந்து வீச்சில் சுராஜ் ரந்திவ் மற்றும் சதுர ரந்துனு ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

36 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த செரசன்ஸ் அணியினர், இன்று போட்டி நிறுத்தப்படும் போது சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். அவ்வணியின் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் அரைச்சதம் கடந்தனர். இதேவேளை பந்துவீச்சில் அசத்திய சச்சித்ர பெரேரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 292 (80) – இரோஷ் சமரசூரிய 85, மிலிந்த சிறிவர்தன 50, சச்சித்ர பெரேரா 3/59, பிரமோத் மதுவந்த 3/88

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 256 (78.5) – திலான் துஷார 60, பபசர வடுகே 52, சதுர ரந்துனு 3/45, சுராஜ் ரந்திவ் 3/87

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 296 (69.2) – இரோஷ் சமரசூரிய 60, சங்கீத் குரே 58, மிலிந்த சிறிவர்தன 54, சச்சித்ர பெரேரா 7/92

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்று முன்தினம் BRC மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற BRC கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

சதீர சமரவிக்ரமவின் சதம் (119) மற்றும் ஹஷான் துமிந்துவின் அரைச்சதம் (72) ஆகியவற்றின் உதவியுடன் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 360 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக பந்துவீசிய தினுக ஹெட்டியாரச்சி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய திலகரத்ன சம்பத் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய BRC கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஹஷென் ராமநாயக்க அதிகபட்சமாக 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், லசித் லக்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அபாரமாக பந்துவீசிய கோல்ட்ஸ் அணியின் பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றிருந்தது. மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 360 (116.3) – சதீர சமரவிக்ரம 119, ஹஷான் துமிந்து 72, தினுக ஹெட்டியாரச்சி 6/115, திலகரத்ன சம்பத் 3/89

BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 249 (83.3) – ஹஷென் ராமநாயக்க 61, லசித் லக்ஷான் 48, பிரபாத் ஜயசூரிய 6/74

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 150/3 (45) – சதீர சமரவிக்ரம 60*, காஞ்சன குணவர்தன 44

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி சர்ரே விலேஜ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகம கிரிக்கெட் கழகத்தின் 5 வீரர்கள் 45 ஓட்டங்களை கடக்க, அவ்வணி 9 விக்கெட்டுகளை இழந்து 406 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. சமீர டி சொய்சா அதிகபட்சமாக 94 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் லஹிரு கமகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்து கொண்டது. அவ்வணியின் தொடக்க வீரர்களான டில்ஷான் முனவீர மற்றும் ரொன் சந்திரகுப்த முறையே 93 மற்றும் 76 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் ராகம கிரிக்கெட் கழகத்தின் அமில அபொன்சோ 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 406/9d (135.2) – சமீர டி சொய்சா 94, லஹிரு மிலந்த 64, லஹிரு திரிமான 66, உதார ஜயசுந்தர 50, ரொஷேன் சில்வா 45,  லஹிரு கமகே 5/103, லக்ஷான் சந்தகன் 3/124

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 232/4 (36) – டில்ஷான் முனவீர 93, ரொன் சந்திரகுப்த 76, அமில அபொன்சோ 3/47

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.