இலங்கை பிரிமியர் லீகில் இன்று ஆரம்பமாகிய B மட்ட கழக அணிகளுக்கு இடையிலான அனைத்து போட்டிகளிலும் மழையின் குறுக்கீட்டால், இன்றைய போட்டிகளில் குறைவான ஓவர்களே வீசப்பட்டதுடன் இரண்டு போட்டிகளின் இன்றைய நாள் முழுவதுமாக கைவிடப்பட்டது.

பாணதுறை விளையாட்டு கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

பாணதுறை விளையாட்டு கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் முதலில் பாணதுறை கழகத்திற்கு துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியது, இதன்படி அவ்வணி சாமர சில்வா பெற்றுக்கொண்ட 49 ஓட்டங்களின் துணையுடனும், பின்வரிசை வீரராக களமிறங்கிய அருண தர்மசேன ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடி 24 பந்துகளில் பெற்றுக்கொண்ட அரைச்சதத்துடனும் (53), 46.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்சுக்காக 245 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில்,  மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக மழை நீடித்த காரணத்தினால் இப்போட்டியின் இன்றைய நாள் முடிவுக்கு வந்தது.

இன்றைய நாளில், பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட வலது கை சுழல் பந்து வீச்சாளரான திலின ஹேரத் நான்கு விக்கெட்டுக்களையும், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தின் அணித்தலைவர் அனுருத்த ராஜபக்ஷ மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டு கழகம்: 245/9 (46.3)அருண தர்மசேன 53*, சாமர சில்வா 49, திலின ஹேரத் 64/4, அனுருத்த ராஜபக்ஷ 56/3


இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் மழையின் அச்சுறுத்தலால், 59.3 ஓவர்கள் வரையிலேயே வீச முடியுமானதாக இருந்தது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, கடற்படை அணியானது முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது. போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரினை பறிகொடுத்த இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம், மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான யொஹான் டி சில்வா அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 81 ஓட்டங்களின் துணையுடன், இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் மழை இடையூறு செய்யும் வரை 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 171 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டிருந்தது.

இன்று பறிபோன விக்கெட்டுக்களில் இரண்டினை தனது சுழல் மூலம் இலங்கை கடற்படை விளையாட்டு கழகத்தின் இஷான் அபேசேகர சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்: 171/4 (59.3) – யொஹான் டி சில்வா 81*, ரனேஷ் பெரேரா 36, இஷான் அபேசேகர 44/2


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுக்கொண்ட பொலிஸ் விளையாட்டு கழக அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லங்கன் கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கியது.

இதன்படி, களமிறங்கிய லங்கன் கிரிக்கெட் கழகம் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 64.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக்கொண்டது. லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் இருபது ஓட்டங்களையேனும் தாண்டாத நிலையில் அதிகபட்சமாக மதுரங்க சொய்ஸா47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்டிருந்த அசேல அளுத்கே 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், சுவஞ்சி மதநாயக்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த பொலிஸ் விளையாட்டு கழகம் 7ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இப்போட்டியில் மழை குறுக்கிட இந்த போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்ததாக நேற்று  நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

இன்றும் இப்போட்டியில் மழை தொடர்ந்ததன் காரணமாக போட்டியின் இன்றைய நாள் முழுமையாக கைவிடப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம்: 159 (64.5) – மதுரங்க சொய்ஸா 47, அசேல அளுத்கே 17/4, சுவஞ்சி மதநாயக்க 55/3

பொலிஸ் விளையாட்டு கழகம்: 7/0 (1.2)

இந்த போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்


களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்

மழை காரணமாகவும், மைதான ஈரலிப்பு காரணமாகவும் இந்த போட்டியின் இன்றைய நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இன்று ஆரம்பமாகியிருந்த போட்டிகள் அனைத்தினதும் இரண்டாம் நாள் நாளை தொடரும்.