சுற்றுலா தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கெதிராக இன்று (09) ஆரம்பமாகிய முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டியில் திமுத் கருணாரத்ன மற்றும் சதீர சமரவிக்ரமவின் அபார சதங்கள் மற்றும் நிஷான் பீரிஸின் அபார பந்துவீச்சின் உதவியுடன் 215 ஓட்டங்களினால் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை வளர்ந்து வரும் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை வளர்ந்துவரும் ஒருநாள் அணித்தலைவராக சந்திமால்
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. இதில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை வளர்ந்து வரும் அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் (09) ஆரம்பமாகிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
ஆரம்பம் முதல் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியின் பந்து வீச்சாளர்களை திமுத் கருணாரத்ன மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி மிரட்டியது. இதில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் அபாரமாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன 98 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். தென்னாபிரிக்காவுடன் அண்மையில் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்தி தொடர் நாயகன் விருதை வென்ற திமுத் கருணாரத்ன, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை இப்போட்டியில் நிரூபித்துக் காட்டினார்.
மறுபுறத்தில் திமுத்துக்கு இணையாக அபார துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட சதீர சமரவிக்ரம சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார்.
எனவே, இவ்விருவரும் முதல் விக்கெட்டுக்காக 252 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து வலுச் சேர்த்தனர்.
இந்நிலையில் 117 பந்துகளில் 14 பௌண்டரிகளுடன் 125 ஓட்டங்களை பெற்றிருந்த திமுத் கருணாரத்ன மஹ்லொக்வானவின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம, 127 பந்துகளில் 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து, லுதோ சிபம்லாவின் பந்து வீச்சில் இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய, சம்மு அஷான் அதே ஓவரிலேயே வந்த வேகத்தில் ஓட்டமின்றி லுதோ சிபம்லாவின் பந்துக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க இலங்கை அணி 299 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் மற்றும் அசேல குணரத்ன ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிந்திருந்தபோதும் இந்த இருவரும் தமது அனுபவமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ஓட்டங்களை சேர்த்தனர். இதன் மூலம் இருவரும் இணைந்து 77 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.
எனவே தினேஷ் சந்திமால் மற்றும் அசேல குணரத்னவின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 376 ஓட்டங்களை இலங்கை வளர்ந்து வரும் அணி பெற்றுக்கொண்டது.
இதில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகிய இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சுமார் ஒரு மாதங்களுக்குப் பிறகு இந்தப் போட்டியில் களமிறங்கியிருந்ததுடன், 72 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 58 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.
தென்னாபிரிக்காவுடனான நேற்றைய ஆட்டமும் இலங்கையின் பதிவுகளும்
அதேபோன்று, இந்த ஆண்டு ஆரம்பத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் உபாதைக்குள்ளாகி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த அசேல குணரத்ன, இந்தப் போட்டியில் 19 பந்துகளுக்கு முகங்கொடுத்து 35 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டு தனது மீள்வருகையை உறுதிப்படுத்தினார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி சார்பாக லுதோ சிபம்லா 2 விக்கெட்டுக்களையும், மஹ்லொக்வானா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பின்னர், 376 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு ஜிவேசன் பிள்ளே மற்றும் மெதிவ் பீரிட்ஸ்கி ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.
எனினும், அந்த அணி 41 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஜிவேசன் பிள்ளே 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். முதல் விக்கெட்டை நிஷான் பீரிஸ் வீழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் டோனி சி சொர்சி அடுத்த ஓவரிலேயே 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றநிலையில், அசித பெர்னாண்டோவின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸின் அபார பந்துவீச்சில் டிசெபாங் டிதோல் 9 ஓட்டங்களுடனும், ஈதன் போஷ் 5 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழக்க தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியது.
எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய மெதிவ் பீரிட்ஸ்கி தென்னாபிரிக்க அணியை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு கடுமையாக போராடினார். எனினும், போட்டியின் 18ஆவது ஓவரில் ஷெஹான் மதுஷங்க வீசிய பந்துக்கு வேகமாக அடிக்க முயன்று சரித் அசலங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிந்தார். 51 பந்துகளுக்கு முகம்கொடுத்த மெதிவ் பீரிட்ஸ்கி 5 பௌண்டரிகள் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
இதனையடுத்து இலங்கையின் சவால் மிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியின் பின்வரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்ததுடன், 33.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை மட்டுமே பெற்று 215 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
பந்து வீச்சில், இலங்கை அணி சார்பாக இளம் வீரர் நிஷான் பீரிஸ் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், ஜெப்ரி வெண்டர்சே 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஏனைய மூன்று பந்து வீச்சாளர்களான அசித பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ மற்றும் ஷெஹான் மதுஷங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.
கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நான்கு மாதங்களில் நடத்தப்படும் என அறிவிப்பு
இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-0 என இலங்கை வளர்ந்து வரும் அணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி 11ஆம் திகதிதம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















