இலகுவாக அரையிறுதிக்கு முன்னேறிய மஹிந்த, ஜோசப் கல்லூரிகள்

326
SINGER U17 DIVISION I

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு காலி மஹிந்த கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகள் தகுதிபெற்றன.

இன்று (29) நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் மஹிந்த கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியை எதிர்கொண்டதோடு புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு, ரோயல் கல்லூரியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த இரு போட்டிகளினதும் விபரம் வருமாறு,

மஹிந்த கல்லூரி, காலி எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி

கொழும்பு புனித பேதுரு கல்லூரி மைதனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் புனித அந்தோனியார் கல்லூரியின் விக்கெட்டுகளை சொற்ப ஓட்டத்திற்குள் சுருட்டிய மஹிந்த கல்லூரி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.

>> இறுதி ஓவர் வரை போராடி காலிறுதிக்கு முன்னேறிய புனித அந்தோனியார்

காலிறுதிக்கு முந்திய சுற்றில் மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற மஹிந்த கல்லூரி காலிறுதியில் எந்த நெருக்கடியுமின்றி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இளம் மஹிந்த கல்லூரியின் அணித்தலைவர் நவோத் பரணவிதான முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். எனினும் துடுப்பெடுத்தாட வந்த புனித அந்தோனியார் கல்லூரி விக்கெட்டுகளை காத்துக் கொள்ள தடுமாறியது. 26 ஓட்டங்களுக்குள் ஆரம்ப ஜோடி ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

புனித அந்தோனியார் கல்லூரி சார்பில் எவரும் 15 ஓட்டங்களைக் கூட தாண்டாத நிலையில் அந்த அணி 34.3 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கே சுருண்டது. பின் வரிசையில் வந்த சசித் ஹிருதிக்க தென்னகோன் பெற்ற 15 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும்.

மஹிந்த கல்லூரி சார்பில் ஆரம்ப ஓவரை வீச வந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் கவீஷ மலியவது 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். சுபனு ராஜபக்ஷ மற்றும் சேத்திய குணசேகர தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மஹிந்த கல்லூரிக்கு புனித அந்தோனியார் கல்லூரி பந்துவீச்சாளர்களிடம் இருந்து எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை.

இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த அணித்தலைவர் நவோத் பரணவிதான மற்றும் கௌஷிக்க சன்கெத் விக்கெட்டை பறிகொடுக்காமலேயே 8 ஓவர்களில் 91 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டினர். பரணவிதான 26 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றதோடு சன்கெத் 25 பந்துகளில் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களை குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி – 88 (34.3) – சசித் ஹிருதிக்க 15, கவீஷ மலியவது 3/29, சேத்திய குணசேகர 2/04, சுபனு ராஜபக்ஷ 2/15

மஹிந்த கல்லூரி, காலி – 91/0 (8) – நவோத் பரணவிதான 50*, கௌஷிக்க சன்கெத் 36*

முடிவு – மஹிந்த கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் ரோயல் கல்லூரி, கொழும்பு

துனித் வெல்லாலகேவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் கொழும்பு ரோயல் கல்லூரியை 128 ஓட்டங்களால் வீழ்த்திய கொழும்பு புனித ஜோசப் கல்லூரி 17 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மட்ட அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

>> மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்

கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த காலிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி அணித்தலைவர் அஷேன் டானியல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

ஜோசப் கல்லூரியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 86 ஓட்டங்களுக்கு பறிபோன நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த வெல்லாலகே மற்றும் யசித் ரூபசிங்க 103 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதன்போது அபாரமாக துடுப்பெடுத்தாடிய வெல்லாலகே 88 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் ரூபசிங்க 96 பந்துகளில் 61 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம் புனித ஜோசப் கல்லூரி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கொன்றை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரோயல் கல்லூரிக்கு வெல்லாலகே தனது இடதுகை சுழற்பந்து வீச்சு மூலம் நெருக்கடி கொடுத்தார்.

ரோயல் கல்லூரியின் முதல் இரு விக்கெட்டுகளும் 24 ஓட்டங்களுக்கு பறிபோக அடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவேளையில் தமது விக்கெட்டை பறிகொடுத்தனர். குறிப்பாக ரோயல் கல்லூரியின் மத்திய மற்றும் பின்வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை வெல்லாலகே சாய்த்தார்.

அதனால் ரோயல் கல்லூரி 39 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அந்த அணிக்காக கமில் மிஷார பெற்ற 34 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும்.

அதிரடி பந்துவீச்சை வெளிக்காட்டிய துனித் வெல்லாலகே 8 ஓவர்களில் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பாதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு – 247/7 (50) – துனித் வெல்லாலகே 67, யசித்த ரூபசிங்க 61, ஜொஹான் டி சில்வா 31, கவிந்து பதிரண 2/44

ரோயல் கல்லூரி, கொழும்பு – 119 (39) – கமில் மிஷார 34, அஹன் விக்ரமசிங்க 28, கவிந்து பதிரண 28, துனித் வெல்லாலகே 5/25, மிரங்க விக்ரமசிங்க 2/14, லக்ஷான் கமகே 2/10

முடிவு – புனித ஜோசப் கல்லூரி 128 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<