இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில் நியமனம்

India tour of England 2025

177
Shubman Gill

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில்லும், உதவித் தலைவராக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் திகதி லீட்சில் நடைபெறவுள்ளது. ஐசிசி இன் 4ஆவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்திய அணி விளையாடுகின்ற முதல் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தலைவராகச் செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் எழுந்தன. மேலும் இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அந்தவகையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று (24) அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் உதவித் தவைராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பந்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 37ஆவது தலைவராக இடம்பெற்றார்.

முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் உதவித் தலைவராக ஜஸ்ப்ரித் பும்ரா செயல்பட்டு வந்த நிலையில் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அவருக்கு தலைவர் பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் கேஎல் ராகுலும் தலைவர் தேர்வில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்திய டெஸ்ட் அணியில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அபாரமாக விளையாடிய நிலையில் அவருக்கும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதுதவிர்த்து இந்திய டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் இடம் உறுதி என பலரும் நினைத்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக கருண் நாயர் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வரும் கருண் நாயர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்திருக்கின்றார். அவர் கடைசியாக 2017ஆம் ஆண்டும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

இதனிடையே, தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷனுக்கு முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. அத்துடன், மற்றுமொரு தமிழக வீரரான வொஷிங்டன் சுந்தரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக முதலிடத்தைப் பிடித்துள்ள சாய் சுதர்ஷன், இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 638 ஓட்டஙகளைக் குவித்துள்ளார். எனவே, சமீபத்திய போர்ம் அவரை டெஸ்ட் அணியில் இடம்பெற வைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு முழுநேர துடுப்பாட்ட வீரராக தமிழகத்தைச் சேர்ந்த எந்த வீரரும் இடம்பெறவில்லை. கடைசியாக அபினவ் முகுந்த் 2011ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தார். அவருக்குப் பிறகு அஸ்வின், வொஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இடம்பெற்றாலும் அவர்கள் பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பிடித்தனர். இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் தற்போது முழுநேர துடுப்பாட்ட வீரராக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார்.

அதேபோன்று முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த அணியின் விக்கெட் காப்பாளராக ரிஷப் பந்த்துடன் துருவ் ஜுரல் பெயரிடப்பட்டுள்ளார். மேலும், சுழல்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளார்கள்.

இதுதவிர, வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரித் பும்ராவுடன், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் என ஐந்து பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதேவேளை, அக்ஸர் படேல் மற்றும் மொஹமட் ஷமிக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதவிர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ரஜத் படிதார், தனுஷ் கோட்டியான் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விபரம்:

சுப்மன் கில் (தலைவர்), ரிஷப் பந்த் (உதவித் தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<