இத்தாலி சீரி A ஜூன் 20 இல் ஆரம்பம்

5

இத்தாலியின் சீரி A கால்பந்து தொடர் ஜூன் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் வின்சன்சோ சபடபோரா உறுதி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்ததை அடுத்து சீரி A தொடர் கடந்த மார்ச் 9ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. அதன்போது, ஜுவன்டஸ் கழகம் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இத்தொடரில், இன்னும் 12 சுற்று போட்டிகள் எஞ்சியுள்ளன.  

ப்ரீமியர் லீக் போட்டிகள் ஜூன் 17 இல் ஆரம்பம்

இந்த மாத ஆரம்பத்தில் வீரர்கள் தனித்தனியாக பயிற்சிகளுக்கு மீண்டும் திரும்பியதோடு இந்த வாரத்தில் குழு நிலை பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.  

இத்தாலி கால்பந்து சம்மேளனத்தினால் 2019-20 பருவத்தை பூர்த்தி செய்வதற்கு வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி கெடு விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

இத்தாலியில் இயல்பு வாழ்வு திரும்பி இருக்கும் நிலையில் கால்பந்து போட்டிகளிலும் அதனை முன்னெடுப்பது தான் சரியானது. B மற்றும் C போட்டிகளையும் மீண்டும் ஆரம்பிக்கும் திட்டம் பற்றி சம்மேளனம் உறுதி அளித்தது. இதனைக் கருத்தில் கொண்டு வரும் ஜூன் 20 ஆம் திகதி சம்பியன்ஷிப் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்என்று சபடபோரா குறிப்பிட்டுள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் 33,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையில் அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் நெருக்கடியான கால அட்டவணை ஒன்றை தயாரிக்க வேண்டி உள்ளது. போட்டிகள் மூடிய அரங்கிலேயே நடைபெறும்.

சீரி A மற்றும் இத்தாலியின் கிண்ண போட்டிகள் என மொத்தம் 127 போட்டிகள் வரை நடத்தப்பட வேண்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, லா லிகா போட்டிகள் வரும் ஜூன் 11 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த பருவம் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அந்த லீக்கின் தலைவர் ஜவியர் டெபாஸ் தெரிவித்துள்ளார்

லா லிகாவில் நடப்புச் சம்பியன் பார்சிலோனா இரண்டு புள்ளிகள் இடைவெளியுடன் ரியல் மெட்ரிட்டை பின்தள்ளி முதலிடத்தில் உள்ளது

ஐரோப்பாவின் முதலாவது பிரதான கால்பந்து போட்டியாக ஜெர்மனியின் புன்டஸ்லிகா தொடர் ஏற்கனவே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு ஐரோப்பாவின் ஐந்து பிரதான சம்பியன்ஷிப் போட்டிகளில் பிரான்ஸின் லீக் 1 தொடர் மாத்திரமே ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<