அஜித் பிரசாந்தின் அபார ஆட்டத்தால் பெனடிக்ட் கல்லூரியை வீழ்த்திய ஹமீட் அல் ஹுஸைனி

332

கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற 18 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவு ஒன்றுக்கான பாடசாலை மட்ட உதைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் புனித பெனடிக்ட் கல்லூரியை அவர்களது சொந்த மைதானத்தில் 5 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி வீழ்த்தியது.

ஹமீட் அல் ஹுஸைனி அணியின் தலைவர் மொஹமட் சஹான் விளையாடாத நிலையில் சிறப்பான ஒரு ஆட்டத்தை அவ்வணி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெனடிக்ட் அணியின் பின்கள வீரர்களின் மோசமான ஆட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹமீட் அல் ஹுஸைனி அணி தனது கோல் கணக்கை  37 ஆவது நிமிடத்தில் அஜித் பிரசாந்த் பெற்ற முதலாவது கோலுடன் ஆரம்பித்தது. தொடர்ந்து 43ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆஷிக் வழங்கிய பந்தினை அஜித் பிரசாந்த் இலகுவாக கோலாக மாற்றினார்.

இதனால், போட்டியின் முதல் பாதி முடிவில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

முதல் பாதி: ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 2 – 0 புனித பெனடிக்ட் கல்லூரி

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஹமீட் அல் ஹுஸைனி அணிக்காக போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் தினேஷ் சுரேன் இலகுவான ஒரு கோலை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மிக விரைவாக 55 ஆவது நிமிடத்தில் அஜித் பிரசாந்த் தனது ஹெட்ரிக் கோலை பதிவு செய்தார்.

மிகவும் அபாரமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜித் போட்டியின் 75 ஆவது நிமிடத்தில் தனது நான்காவது கோலை பெற்றுக்கொண்டு போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். 

ஹமீட் அல் ஹுஸைனி பெனடிக்ட் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

மேலும் பல கோல்கள் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களை ஹமீட் அல் ஹுஸைனி அணி பெற்றிருந்த போதும் இயான் ஏசரிஸ்ட் மற்றும் ரெஹான் செட்ரிக் ஆகியோரின் சிறந்த தடுப்பாட்டத்தின் மூலம் அவை முறியடிக்கப்பட்டன.

எனவே, போட்டியின் இறுதியில் 5 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் ஹமீட் அல் ஹுஸைனி அணி வெற்றி பெற்று இந்த தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம் : ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 5 – 0 புனித பெனடிக்ட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்
அஜித் பிரசாந்த் 37’,43’,55’ & 75’ தினேஷ் சுரேன் 50’

ஆட்ட நாயகன்
அஜித் பிரசாந்த்

மஞ்சள் அட்டைகள்
மொஹமட் குர்ஷித் 13’ ( ஹமீட் அல் ஹுஸைனி ) மனிந்த்ர 86’ ( புனித பெனடிக்)

மேலும், கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிகளுக்கு இடையில் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஸாஹிரா கல்லூரி அணி 5 – 1 கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் 1 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையில் இருந்த போதும் இரண்டாவது பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாஹிரா கல்லூரி அணி மேலும் நான்கு கோல்களை பெற்று இறுதியாக 5 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

முழு நேரம் : ஸாஹிரா கல்லூரி 5 – 1 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – சாஜித் 12’, முஷ்பிர் 63’ , அக்தார் 65’ , ரீஸா 70’ & 90’
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – மொஹமட் ஷிபான் 28’

மொரகஸ்முல்ல மைதானத்தில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் புனித ஜோசப் கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரி அணிகள் மோதின. இப்போட்டியில் புனித ஜோசப் கல்லூரி, ரூபசிங்க மற்றும் ரஷ்மிந்த ஆகியோரின் ஹெட்ரிக் கோல்கள் மூலம் 8 – 1 என்ற பாரிய கோல்கள் வித்தியாசத்தில் கிங்ஸவூட் கல்லூரியை வீழ்த்தியது. போட்டியின் முதல் பாதி நிறைவில் 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் புனித ஜோசப் கல்லூரி முன்னிலையில் இருந்தது.

கிங்ஸ்வூட், ஜோசப் கல்லூரிகளுக்கிடையிலான போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

போட்டியின் இரண்டாவது பாதியில் போட்டியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புனித ஜோசப் கல்லூரி 6 கோல்களை பெற்றுக்கொண்டது. மேலும் கிங்ஸ்வூட் கல்லூரி சார்பாக 60 ஆவது நிமிடத்தில் சுலக்‌ஷன பெற்ற கோலின் மூலம் ஆறுதல் அடைந்தனர். போட்டியின் முடிவில் புனித ஜோசப் கல்லூரி 8 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

முழு நேரம் : புனித ஜோசப் கல்லூரி 8 – 1 கிங்ஸ்வூட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித ஜோசப் கல்லூரி – ரூபசிங்க 8’, 31’ & 65’ ரஷ்மிந்த 10’, 55’ & 65’ பின்டோ 42’ ஜோய் 47’
கிங்ஸ்வூட் கல்லூரி – சுலக்‌ஷன 60’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<