இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக ருமேஷ் ரத்னாயக்க

1013
Rumesh Ratnayake

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், பயிற்றுவிப்பாளருமான ருமேஷ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான சுற்றுப்பயணத்தின் போது அவர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

இலங்கை – பாகிஸ்தான் மோதும் பகலிரவு டெஸ்ட் விரைவில்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டுபாயில் நடத்துவதற்கு…

இந்திய அணிக்கெதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. எனவே, அணியில், ஒரு சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.  

குறிப்பாக இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு ஓட்டங்களை வாரிக் கொடுத்த இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன்படி, குறித்த பதவிக்கு முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னாயக்கவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இடம்பெற்று வருகின்ற இந்திய அணியுடனான தொடரின் பின்னர் ருமேஷ் தனது பதவியினை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னதாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்த சம்பக்க ராமனாயக்க இந்திய தொடருக்கு முன் தனிப்பட்ட காரணங்களுக்கான அப்பதவியில் இருந்து இராஜினமாச் செய்திருந்தார். அதனையடுத்து இந்திய தொடருக்கான இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதன்படி, தற்போது அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் சமிந்த வாஸ் 19 வயதுக்குட்பட்ட அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர்களாக 6 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களான சமிந்த வாஸ் மற்றும் ரவீந்திர புஷ்பகுமார ஆகியோர் முக்கியமானவர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டில் ஆரம்ப காலத்தில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய 53 வயதான ருமேஷ் ரத்னாயக்க 2001ஆம் ஆண்டு இலங்கை அணியின் முகாமையாளராகவும், அதன் பிறகு 2007இல் இலங்கை அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும், 2011ஆம் ஆண்டு இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.  

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் பந்து வீச்சு அலோசகராகவும் அவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

தற்பொழுது, இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்புக் குழு, தேர்வுக் குழு மற்றும் ஏனைய அதிகாரங்களில் 1996ஆம் ஆண்டு இலங்கை தேசிய அணியில் அங்கம் வகித்த 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.