ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

India Tour Of Australia 2024/25

57
Rohit

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 5ஆவது டெஸ்;;ட் போட்டியில் அணியின் நலன் கருதி விலகுவதற்கு தீர்மானித்ததாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை வென்றுள்ளது. அதேபோல, இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பினையும் இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. குறிப்பாக, இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் அணிக்கு கவலையளிக்கும் விதமாகவே அமைந்தது. இந்திய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இதில் குறிப்பாக, அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர், ரோஹித் சர்மாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இரண்டாவது டெஸ்டின்போது இந்திய அணியில் இணைந்த அவர், மத்திய வரிசையில் களமிறங்கி 3, 6 போன்ற சொற்ப ஓட்டங்களைதான் எடுத்தார். தொடர்ந்து, 3ஆவது டெஸ்டில் 10 ஓட்டங்களைதான் அவரால் எடுக்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து, 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது ஓபனர் இடத்திற்கு திரும்பிய ரோஹித் சர்மா, அதில் 3, 9 ஆகிய ஓட்டங்களைக் குவித்தார். இப்படி தொடர்ந்து படுமோசமாக சொதப்பியதால், 5ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டிக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா பெயர் நீக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தியிருந்தார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுடனான 5ஆவது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால், இதுதான் அவருக்கு கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், அந்த அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறியதாவது: நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. சிட்னி போட்டியில் இருந்து மட்டுமே விலகி உள்ளேன். பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவினருடன் இது குறித்து மிகவும் எளிதான முறையில் கலந்துரையாடினேன். என்னால் ஓட்டங்களை எடுக்க முடியவில்லை, நான் ஃபார்மில் இல்லை, சிட்னி போட்டி முக்கியமானது, இதனால் ஃபார்மில் இருக்கும் வீரர் விளையாட வேண்டும் என்றேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எமது துடுப்பாட்ட வரிசையில் சிலரது ஃபார்ம் சிறப்பாக இல்லை. அதிகளவில் ஃபார்மில் இல்லாத வீரர்களை கொண்டு விளையாட முடியாது. அதை நான் யோசித்து பார்த்தேன். நான் எங்கும் செல்லவில்லை. நான் ஓய்வு பெறவில்லை. எனது துடுப்பு மட்டையில் இருந்து ஓட்டங்கள் வராத காரணத்தால் விலகி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை, இந்த முடிவை எடுப்பது கடினமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் முன்னால் வைத்தால், இந்த முடிவு விவேகமானது. இதற்கு மேல் யோசிக்க மாட்டேன்.

2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் ஓய்வு அறையை பகிர்ந்து வருகிறேன். முக்கிய நோக்கம் எப்போதும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் சில நேரங்களில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அணியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால் அணிக்கு என்ன தேவை என்பதை அறியவேண்டும். இல்லையென்றால் எந்தப் பயனும் இல்லை. அணியைப் பற்றி யோசிக்கவில்லை என்றால் அந்த மாதிரியான வீரர்களை விரும்பமாட்டார்கள். அணி மட்டுமே முக்கியம். 11 வீரர்கள் இணைந்து விளையாடுவதால்தான் அணி என்று அழைக்கிறோம். ஒன்று, இரண்டு வீரர்கள் கிடையாது, 11 பேர் விளையாடுகிறார்கள், எனவே ஒரு அணியாகவே சாதிக்க முயற்சி செய்கிறோம். எனது இந்த பார்ம் அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகும் இப்படியே இருக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், அன்றாட வாழ்க்கை மாறுகிறது. எனவே நிலைமை மாறும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதே நேரத்தில், நான் யெதார்த்தமாகவும் இருக்க வேண்டும். எனவே ஒரு நபரிடம் உள்ளே மைக், அல்லது மடிக்கணினி அல்லது பேனை ஆகியவற்றால் அவரால் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பது எங்கள் வாழ்க்கையை மாற்றாது. நாங்கள் பல ஆண்டுகளாக இந்த விளையாட்டை விளையாடி வருகிறோம்.

எனவே நாங்கள் எப்போது விளையாட்டை விட்டு செல்ல வேண்டும், எப்போது விளையாடக்கூடாது, எப்போது வெளியில் உட்கார வேண்டும், எப்போது தலைவராக இருக்க வேண்டும் என்பதை இவர்களால் தீர்மானிக்க முடியாது. நான் ஒரு விவேகமுள்ள மனிதன். ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன். நான் இரண்டு குழந்தைகளின் தந்தை. அதனால் வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்வதற்கு கொஞ்சம் மூளை இருக்கிறது என்று ரோஹித் சர்மா கூறினார்.

மேலும் பேசிய அவர், ”5ஆவது டெஸ்டில் விளையாகிவிட்டதால், தான் டெஸ்டில் இருந்து ஓய்வுபெற உள்ளேன் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரால் அபாரமாக செயல்பட முடிகிறது. இதனால்தான், நானாகவே ஓய்வுக்கு சென்றால். இதனால், அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த உடன், நான் ஓய்வுபெறுவதாக அர்த்தம் இல்லை. நான் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடிப்பேன்” எனத் தெரிவித்தார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<