இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி சொக்லட் வர்த்தக நாமமான Ritzbury அனுசரணையில் 3ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான சேர். ஜோன் டார்பட் அஞ்சலோட்ட திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (11) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இம்முறை அஞ்சலோட்ட திருவிழாவில் ஆண்களுக்கான ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை 155 புள்ளிகளை எடுத்த கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்களுக்கான ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை 130 புள்ளிகளை எடுத்த வத்தளை லைசியம் சர்வதேச கல்லூரியும் சுவீகரித்தது.
14, 16, 18, 20 ஆகிய வயதுகளுக்குட்பட்ட பிரிவுகளில் இரு பாலாருக்குமாக நடைபெற்ற இம்முறை சேர். ஜோன் டார்பட் அஞ்சலோட்ட திருவிழாவில் ஓட்டு மொத்த ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியும் (103 புள்ளிகள்) மூன்றாம் இடத்தை வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் (81 புள்ளிகள்) பெற்றன. அதேபோல, வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் (116 புள்ளிகள்) ஒட்டு மொத்த பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயம் (37 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
வயது பிரிவு சம்பியன்ஷிப் போட்டிகளில், 12 வயதின் கீழ் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை 15 புள்ளிகளை எடுத்த கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை 15 புள்ளிகளை எடுத்த கொழும்பு புனித பிறிஜெட் மடம் கல்லூரியும் தனதாக்கிக் கொண்டது.
14 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும் (30 புள்ளிகள்), பெண்கள் பிரிவு சம்பியன் பட்டத்தை கொத்தலாவல மகா வித்தியாலயமும் (23 புள்ளிகள்) பெற்றுக்கொள்ள, 16 வயதின்கீழ் ஆண்கள் பிரிவு சம்பியனாக நீர்கொழும்பு மாரிஸ் டெல்லா கல்லூரியும் (35 புள்ளிகள்), பெண்கள் பிரிவு சம்பியனாக வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் (42 புள்ளிகள்) பெற்றுக் கொண்டன.
- 2025 சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 30 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
- சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் சந்துன், டில்னி சிறந்த வீரர்களாக முடிசூடல்
இதனிடையே, 18 வயதின்கீழ் ஆண்கள் பிரிவு சம்பியனாக வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி (50 புள்ளிகள்) தெரிவாக, பெண்கள் பிரிவு சம்பியனாக வலள ஏ ரத்நாயக்க மத்திய கல்லூரியும் (46 புள்ளிகள்) தெரிவாகியது. அதேபோல, 20 வயதின்கீழ் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை 60 புள்ளிகளை எடுத்த கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியும், பெண்களுக்கான சம்பியன் பட்டத்தை 57 புள்ளிகளை எடுத்த வத்தளை லைசியம் சர்வதேச கல்லூரியும் பெற்றுக்கொண்டன.
இந்த நிலையில், போட்டியின் முதல் நாளன்று நடைபெற்ற 18 வயதின்கீழ் ஆண்களுக்கான 4×800 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி மற்றும் போட்டியின் மூன்றாம் நாளன்று நடைபெற்ற 18 வயதின்கீழ் பெண்களுக்கான நீண்டதூர கலவை போட்டி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி அணி வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, போட்டியின் இறுதி நாளன்று இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியொன்றும் நடைபெற்றது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக அஞ்சலேட்ட சம்பியன்ஷிப் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஆகிய போட்டித் தொடர்களுக்கான அடைவுமட்டத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை A, B மற்றும் C என மூன்று அணிகள் பங்குபற்றின. இதில் போட்டித் தூரத்தை 03 நிமிடங்கள் 05:58 செக்கன்களில் ஓடி முடித்த இலங்கை ஏ தங்கப் பதக்கதை சுவீகரித்தது. இலங்கை ஏ அணியில்; அருண தர்ஷன, சதேவ் ராஜகருணா, டி.ஆர். மதுஷ மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
>>Photos – Ritzbury Relay Carnival 2025 – Day 3<<
அத்துடன், இப்போட்டியை 03 நிமிடங்கள் 06:57 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை பி அணி (ஒமெல் சில்வா, இசுரு லக்ஷான், ஏ.ஐ. மதுரங்க, பிரதீப் குமார) வெள்ளிப் பதக்கத்தை தட்டிச்செல்ல, இந்திய கனிஷ்ட அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதில் சிறப்பம்சம் என்னவெனில் இந்தியா சார்பில் பங்கேற்ற அணி 20 வயதின்கீழ் அஞ்சலோட்ட அணி, போட்டித் தூரத்தை 03 நிமிடங்கள் 08:02 செக்கன்களில் கடந்து ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இந்திய கனிஷ்ட சாதனையையும் முறியடித்து சாதனை படைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.