2025ஆம் ஆண்டுக்கான ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கிண்ண T20 தொடரின் ஏழாவது குழு நிலைப் போட்டியில், இன்று (17) இலங்கை A அணி, ஹொங்கொங் A அணியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு, தொடரில் தமது முதல் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.
கட்டார் டோஹாவின் வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதலில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
>>இலங்கையுடன் ஆப்கானிஸ்தான் A த்ரில் வெற்றி
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங், இலங்கை பந்துவீச்சில் தடுமாறியது. இதனால் அவ்வணிக்கு 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.
ஹொங்கொங் துடுப்பாட்டத்தில் சிவ் மதூர் 26 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில், இலங்கை A அணியின் பந்துவீச்சில், ட்ரவீன் மெதிவ் 3 விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் 118 என்ற சாதாரண இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி தொடக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் விளையாடியது.
இதனால் இலங்கை இளம் வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கினை 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களுடன் அடைந்தனர்.
இலங்கை A துடுப்பாட்டத்தில், அதன் வெற்றியினை உறுதி செய்த நுவனிது பெர்னாண்டோ வெறும் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேநேரம் போட்டியின் ஆட்டநாயகனாக ட்ரவீன் மெதிவ் அவரது பந்துவீச்சிற்காக தெரிவாகினார்.






















