மீண்டும் ரியல் மெட்ரிட் திரும்பினார் சினேடின் சிடேன்

19
Picture Courtesy – AFP

ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் பயிற்சியாளராக சினேடின் சிடேன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து பயிற்சியாளராக இருந்த சான்டியாகோ சொலரி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அணியில் முழுமையான மாற்றங்களை கொண்டுவருவதற்கு சிடேன் வாக்குறுதி அளித்துள்ளார்.  

ரியெல் மெட்ரிட்டுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த சிடான் திடீர் ராஜினாமா

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது…

ஸ்பெயினின் பலம்மிக்க கழகமான ரியல் மெட்ரிட்டுக்கு மூன்று முறை தொடர்ச்சியாக சம்பியன்ஸ் லீக் பட்டத்தைப் பெற்றுக்கொடுத்த சிடேன் கடந்த ஆண்டு மே மாதம் எதிர்பாராத விதமாக தனது பயிற்சியாளர் பொறுப்பை இராஜினாமா செய்தார். அவருக்கு பதில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜுலேன் லொப்டெகுய் கடந்த ஒக்டோபரில் நீக்கப்பட்டு சொலரி கடந்த நான்கு மாதங்கள் பயிற்சியாளர் பொறுப்பை வகித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணியுடனான போட்டியில் தோற்ற ரியல் மெட்ரிட் சம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியது. அதற்கு முன்னர் பார்சிலோனாவுடனான இரண்டு எல் கிளாசிக்கோ போட்டிகளில் தோற்ற அந்த அணி, கோபா டெல் ரே தொடரில் இருந்து வெளியேறியதோடு லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் 12 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.     

வரும் ஆண்டுகளுக்காக நாம் அனைத்து வகைகளிலும் அனைத்து மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்று ரியல் மெட்ரிட்டுடன் ஜுன் 30, 2022 வரை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் அந்தக் கழகத்தின் சான்டியாகோ பெர்னபு அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சினேடின் சிடேன் குறிப்பிட்டார்.   

நான் மீண்டு திரும்பியுள்ளேன், என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே தற்போது முக்கியமாக உள்ளது. தற்போது அது விடயமல்ல, நாம் இன்னும் 11 போட்டிகள் ஆட வேண்டி உள்ளது என்றும் சிடேன் குறிப்பிட்டார்.  

ரியல் மெட்ரிட் அடுத்து லா லிகாவில் கெல்டா விகோவை தனது சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

ரியல் மெட்ரிட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளரானார் சென்டியாகோ

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஜுலேன் ……

முன்னாள் ஸ்பெயின் அணி முகாமையாளர் லொப்டெகுயுக்கு பதில் முன்னாள் ரியெல் மெட்ரிட் மற்றும் ஆர்ஜன்டீன மத்தியகள வீரரான சொலரி நவம்பர் 13 ஆம் திகதி ரியல் மெட்ரிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றபோதும் அவரால் அணிக்கு வெற்றி தேடித்தர முடியாமல் போனது.

ரியல் மெட்ரிட்டுடன் தொடர்ந்து பணியாற்றினால் வேறு பொறுப்புகளை அளிக்க சொலரிக்கு அந்தக் கழகம் வாக்குறுதி அளித்துள்ளது.

சிடேனின் கீழ் ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதோடு, அணியில் இடம்பெற்ற காலத்திலும் அவர் அந்தக் கிண்ணத்தை வென்றுள்ளார். எனினும் ரியல் மெட்ரிட் தனது சொந்த மைதானத்தில் அஜக்ஸ் அணியிடம் 5-3 என அதிர்ச்சித் தோல்வியை சந்தித்து 2006 ஆம் ஆண்டுக்கு பின் முன்கூட்டியே சம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறியது.

தலைவர் என்னை அழைத்தபோது நான் மாட்டேன் என்று கூறவில்லை என்றார் சிடேன். அதிகம் வெற்றிபெற்றால் சில நேரம் தேய்வு ஒன்று ஏற்படும். இந்த ஆண்டும் அது போன்றது தான். நான் யாரையும் குற்றம் கூறவில்லை. வீரர்கள், அணி மற்றும் கழகத்திற்காக சிறந்ததை செய்ய லொப்டெகுய் மற்றும் சொலரி விரும்பினார்கள். அது நடக்க வேண்டியவாறு நடந்தது. நான் அதற்குள் சிக்க விரும்பவில்லை. நாம் முன்னோக்கி பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

ரியல் மெட்ரிட் அணிக்கு 22 போட்டிகளுக்கு சொலரி பொறுப்பாக இருந்தார். இதில் எட்டு போட்டிகளில் தோல்வி மற்றும் இரண்டு சமநிலைகள் பதிவானதோடு கடந்த டிசம்பரில் பிஃபா கழக உலகக் கிண்ணத்தை அந்த அணி வெல்ல உதவினார்.   

அதிர்சித் தோல்விகளால் பயிற்சியாளரை நீக்கியது ரியல் மெட்ரிட்

ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் பயிற்சியாளர் ஜூலன் ………

லா லிகா தொடரில் ரியல் மெட்ரிட் தற்போது 3அவது இடத்தில் இருப்பதோடு அந்த அணியை முதல் நான்கு இடங்களுக்குள் தக்கவைத்து சம்பியன்ஸ் லீக்கிற்கான இடத்தை உறுதி செய்வதே சிடேனின் தற்போதைய முக்கிய பொறுப்பாக உள்ளது. அந்த அணி ஐந்தாவது இடத்தில் இருக்கும் அலவேஸ் அணியை விடவும் 10 புள்ளிகளால் முன்னிலையில் உள்ளது.

ரபா பெனிட்டஸ் நீக்கப்பட்டதை அடுத்து 2016 ஆம் ஆண்டு ரியல் மெட்ரிட் பயிற்சியாளரான சிடேன், அந்த பருவத்தின் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றதோடு 2017இல் லா லிகா மற்றும் ஐரோப்பிய கிண்ணம் இரண்டையும் கைப்பற்றினார்.

லிவர்பூல் அணியை வீழ்த்தி ரியல் மெட்ரிட் கடந்த பருவத்தில் மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் லீக்கை வென்று ஐந்து நாட்களின் பின் தனது பதவியில் இருந்து விலகுவதாக சிடேன் அறிவித்தார். விலகுவதற்கு இது சரியான தருணம் என்று அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.  

பிரான்ஸைச் சேர்ந்த 46 வயதுடைய சிடேன் வீரராக உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய சம்பியன்ஷிப்பை வென்றிருப்பதோடு, ரியல் மெட்ரின் பயிற்சியாளராக ஒன்பது கிண்ணங்களை வென்றுள்ளார்.

கழகத்தின் வரலாறு மாறாது. உலகில் மிகச் சிறந்த கழகம் இது என்பது எம் அனைவருக்கும் தெரியும் என்று கூறிய சிடேன், நான் இங்கு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, சனிக்கிழமை போட்டி பற்றி நான் யோசிக்கிறேன் என்றார்.    

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<