தென்னாப்பிரிக்க T20I அணியின் தலைவர் பதவியிலும் மாற்றம்

South Africa's Tour Of Zimbabwe 2025 

6
Rassie van der Dussen

ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு T20I தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்கா T20I அணியின் தலைவராக ரஸ்ஸி வான் டெர் டுசென் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20I தொடர் ஜிம்பாப்வேயில் ஜூலை 14ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி இ;ன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 அணியின் வழக்கமான தலைவரான எய்டன் மார்க்ரமுக்கு பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க T20I அணியின் பதில் தலைவராக ரஸ்ஸி வான் டெர் டுசென் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இந்த அணியில் 4 அறிமுக வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அந்தவகையில் இந்த அணியில் கோர்பின் போஷ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரூபின் ஹெர்மன் மற்றும் செனுரன் முத்துசாமி ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் மூவரும் இந்த ஆண்டு நடைபெற்ற SA20 தொடரில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அதுமாத்திரமின்றி, இந்த வீரர்களில் கோர்பின் போஷ் மாத்திரம் தென்னாப்பிரிக்க டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்காக விளையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக T20I போட்டியில் விளையாடிய டெவால்ட், அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு திறமைகளை வெளிப்படுத்தாத காரணத்தால் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தகுவேனா மபாகா, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜெரால்ட் கோட்ஸி மற்றும் நந்த்ரே பர்கர் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதேசமயம் இந்த அணியில் வழக்கமான தலைவர் எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், அன்ரிச் நோர்ட்ஜே  மற்றும் தப்ரெஸ் ஷம்சி போன்ற நட்சத்திர வீரர்கர்களுக்கு இடம் கிடைக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க T20I அணி விபரம்: ரஸ்ஸி வான் டெர் டுசென் (கேப்டன்), கோர்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், நாந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி என்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஆண்டிலே சிமெலேன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<