இந்தியாவுடனான இறுதி டெஸ்டில் இருந்து ஹேரத் விலகினார்

1943
Rangana

இலங்கை டெஸ்ட் அணியின் அனுபவமிக்க இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், தனது முதுகில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை பல்லேகெல மைதானத்தில் இந்திய அணிக்கெதிராக நடைபெறவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ள அண்மைக்கால தொடர் உபாதைகள்

கிரிக்கெட் வீரர்கள் தகுதிபெற்ற ஊழியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களாக..

இந்திய அணிக்கெதிராக கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் போதே ஹேரத் இவ்வாறு உபாதைக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்றபோது ஹேரத்தின் கைவிரல் உபாதைக்குள்ளாகியிருந்தது. எனினும், தொடர்ந்து விளையாடிய அவர் குறித்த போட்டியில், 42 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட தினேஷ் சந்திமாலுக்குப் பதிலாக அணியின் தலைவராகச் செயற்பட்ட ஹேரத், கடந்த 3 வாரங்களில் மாத்திரம் 151 ஓவர்கள் பந்துவீசியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.  

ஹேரத்தின் உபாதை குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையில், ஹேரத்தின் திடீர் உபாதை தொடர்பில் தெரிவுக்குழுவினருக்கு அவர் அறிவித்துள்ளார். இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளராக விளங்குகின்ற ஹேரத்தின் உபாதை தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்துள்ள இத்தருணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை கருத்திற்கொண்டு, இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, தெரிவுக்குழுவினருடன் கலந்துரையாடி ஹேரத்திற்குப் பதிலாக மாற்று வீரரொருவரை அணிக்குள் இடம்பெறச்செய்ய நடவடிக்கை எடுப்போம்” என அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது 39 வயதான ஹேரத் 2016ஆம் ஆண்டு ஒருநாள் மற்றம் T-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவரை 83 டெஸ்ட் போட்டிகளில் 389 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள அவருக்கு, டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவதற்கு இன்னும் 11 விக்கெட்டுக்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.  

முன்னதாக இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 81ஆவது ஓவரை வீசும்போது இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பினால் வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் உபாதைக்குள்ளானார். இதனையடுத்து அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்த, இந்தியாவுடனான எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகினார்.

காலியில் நடைபெற்ற இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன, இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக தொடரிலிருந்து வெளியேறியிருந்தார். அதன்பிறகு 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற பயிற்சிகளின் போது முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலும் இத்தொடரிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.