T20 உலகக் கிண்ணத்தில் ரபாடா பங்கேற்பதில் சிக்கல்

ICC Men's T20 World Cup  2026 

36
Rabada

விலா எலும்பு காயத்தால் SA20 தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, T20 உலகக் கிண்ணத்திற்காக ஜனவரி 2ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள தென்னாப்பிரிக்க குழாத்தில் இடம்பெறுவது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SA20 தொடரின் நடப்புச் சம்பியனான MI கேப் டவுன் அணி 26ஆம் திகதி டர்பன் சுப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டபோது அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா விளையாடவில்லை. அதே அணிக்கு எதிராக இன்று (28) நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டிசம்பர் 31ஆம் திகதி நடைபெறும் ப்ரிடோரியா கேபிடல்ஸ் அணியுடனன மூன்றாவது போட்டிக்கு அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்ப்பதாக அணித்தலைவர் ரஷித் கான் கூறியுள்ளார்.

இதன்படி, ஜனவரி 2ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள 15 பேர் கொண்ட T20 உலகக் கிண்ண தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற ரபாடாவுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கவுள்ளது. அந்நாட்டு தேர்வுக்குழுவை திருப்திப்படுத்த அந்த ஒரு போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும்.

ரபாடா உடல்தகுதியுடன் இருந்தால் T20 உலகக் கிண்ணத்தில் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு வரிசையை அவரே வழிநடத்துவார் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக 2019 ஒருநாள் உலகக் கிண்ணத்தின் போது உபாதைக்குள்ளாகியிருந்த டேல் ஸ்டெயினை அணியில் சேர்த்த தென்னாப்பிரிக்க அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு போட்டியும் விளையாடாமல் அவர் நாடு திரும்பினார். எனவே, இதேபோன்ற ஒரு நிலைமை ரபாடாவிற்கு ஏற்படுமா என கிரிக்கெட் வல்லுனர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு ரபாடா எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியா சுற்றுப்பயணத்தின் இரு டெஸ்ட்களிலும், ஒருநாள் மற்றும் T20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

இதனிடையே, தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களான ஜெரால்ட் கோட்சி, நொன்ட்ரே பர்கர் ஆகிய இருவரும் காயத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மறுபுறத்தில் 19 வயது இடதுகை வேகப்பந்து வீச்சாளர் க்வெனா மஃபாகா தொடைத்தசை காயத்திலிருந்து மீண்டு SA20 தொடரின் முதல் போட்டியில் களமிறங்கினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<