பிரேசிலின் றியோ நகரில் கடந்த வருடம் நடைபெற்ற பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பாக வெண்கலப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த ஹேரத், நேற்று (22) ஆரம்பமான 20ஆவது இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் புதிய தேசிய சாதனை படைத்து அசத்தினார்.
2020இல் இலங்கையில் இடம்பெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா
தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை …
டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 20ஆவது இராணுவ பரா விளையாட்டு விழாவில் பிரதானமானதும் கடைசியுமான பரா மெய்வல்லுனர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று (22) ஆரம்பமாகின. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இம்முறை போட்டிகளில் 72 பரா மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 11 படைப் பிரிவுகளைச் சேர்ந்த 700இற்கும் மேற்பட்ட பரா இராணுவ வீரர்கள் பங்குபற்றி தத்தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட தினேஷ் பிரியந்த ஹேரத், 61.61 மீற்றர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தனது சொந்த சாதனையையும் முறியடித்தார். முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற றியோ பரா ஒலிம்பிக்கில் 58.23 மீற்றர் தூரம் எறிந்து இச்சாதனையை அவர் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்வம் மற்றும் அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் என்பவற்றின் பலனாக சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த அவர், இலங்கைக்காக ஒலிம்பிக் பதக்கமொன்றையும் வென்று கொடுத்தார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் 53.59 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கே.ஜி ஏகநாயனக்க வெள்ளிப் பதக்கத்தையும், 4..41 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த மிஹிந்து குருகுலசூரிய வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு ஆண்களுக்கான 400 மீற்றரில் வெண்கலப் பதக்கம் வென்று, பரா ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த பிரதீப் சன்ஞய, நேற்று நடைபெற்ற டி45/46/47 பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்டு 5.84 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.

1996ஆம் ஆண்டு முதல் ஆசிய மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இலங்கை பரா வீரர்கள், லண்டன் 2012 பரா ஒலிம்பிக் மற்றும் ரியோ 2016 பரா ஒலிம்பிக் என்பவற்றில் 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.
எனவே, இம்முறை போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 2018 ஒக்டோபர் 8 முதல் 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆசிய பரா விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பினை வழங்கு தேசிய பரா சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.




















