போராட்டத்தின் பின் கெலிஓய அணியை வீழ்த்திய குரே

378
Gelioya FC vs Cooray SC

பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) கால்பந்து சுற்றுப் போட்டியில் கெலிஓய கால்பந்துக் கழகத்திற்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற குரே (Cooray) விளையாட்டுக் கழகம் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சிடி கால்பந்து லீக் அணியான குரே விளையாட்டுக் கழகம், கம்பளை கால்பந்து லீக் அணியான கெலிஓய விளையாட்டுக் கழகத்தை அவர்களது சொந்த மைதானமான கம்பளை வீகுலுவத்தை மைதானத்தில் எதிர்கொண்டது.

படோவிட அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த செரண்டிப்

பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் l) கால்பந்துத் தொடரின் படோவிட…

இந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் வேகமான பந்துப் பரிமாற்றங்கள் மூலம் எதிரணிக்கு சவால் கொடுத்த வண்ணமே இருந்தன. அதன் பலனாக போட்டியின் ஆறாவது நிமிடத்தில், கெலிஓய அணியின் மத்திய களத்திலிருந்து வழங்கப்பட்ட பந்தைப் பெற்ற ஒபியாரா ஜோன், பந்தை ருக்ஸானுக்கு வழங்க, அவர் அதனை கோலாக்கும் முயற்சியில் கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்து கோல் கம்பங்களை தாண்டிச் சென்றது.  

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் குரே அணிக்கு முதல் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அவ்வுதையைப் பெற்ற தனன்ஞய தீப்தி பந்தை சிறந்த முறையில் கெலிஓய அணியின் பெனால்டி எல்லைக்கு உள்ளனுப்பினார். இதன்போது பந்தைப் பெற்ற குரே அணி வீரர் விஜய் சுரேந்திரன் அதனை கோலை நோக்கி உதைந்தபோது கெலிஓய அணியின் பின்கள வீரர்களால் அது தடுக்கப்பட்டது.

மேலும் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் மீண்டும் கெலிஓய அணியின் ஒபியாரா ஜோன் மூலம் வழங்கப்பட்ட பந்தைப் பெற்ற ருக்ஸான், அதனை வேகமாக கோலை நோக்கி உதைந்தார். உதையப்பட்ட பந்து கோல் கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

மீண்டும் 19ஆவது நிமிடத்தில் முகமட் இஸ்ஹான் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை ருக்ஸான் தனது தலையால் முட்டி கோலுக்குள் அனுப்பினார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு சற்று வெளியால் சென்றது.  

போட்டியின் போக்கை புரிந்துகொண்ட குரே அணி வீரர் விஜித பெர்னாண்டோ, போட்டியின்  27ஆம் நிமிடத்தில் கெலிஓய அணியின் பின்கள வீரர்களை சிறந்த முறையில் தாண்டிச் சென்று பெனால்டி எல்லைக்குள் பந்தை உள்ளனுப்பினார். பந்தைப் பெற்ற மதுரங்க ஹேரத் அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தவறியதால் கோலுக்கான சிறந்த முயற்சி வீணாகியது.

மீண்டும் 36ஆம் நிமிடத்தில் குரே அணிக்கு கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பை பெற்ற மதுரங்க ஹெரத், பந்தை சிறந்த முறையில் உள்ளனுப்பினார். அதனை விஜய் சுரேந்திரன் தனது தலையால் முட்டி கோலாக்க முயற்சி செய்தார். எனினும், பந்து கெலிஓய அணியின் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டு, மீண்டும் குரே அணியின் தரங்க விஜேசிரியவிடம் சென்றது. அவர் பந்தை வேகமாக கோலின் இடதுபக்க மூலையை நோக்கி உதைந்தார். எனினும் அங்கிருந்த கெலிஓய அணி வீரர் முகமட் இஸ்ஹான் மூலம் பந்து தடுக்கப்பட்டது.    

அதனைத் தொடர்ந்து போட்டியின் முதல் பாதியின் இறுதிக் கட்டமான 42ஆம் நிமிடத்தில் கெலிஓய அணிக்கு கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பை அவ்வணி வீரர் மஞ்சுல பிரசன்ன பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்து குரே அணி வீரர்களைத் தாண்டி ஒபியாரா ஜோனிடம் சென்றது. தன்னை நோக்கி வந்த பந்தை ஜோன் கோலை நோக்கி உதைந்தபோது குரே அணியின் பின்கள வீரர்களால் அது தடுக்கப்பட்டது.  

இதன் காரணமாக கோல்கள் அற்ற நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.   

முதல் பாதி: கெலிஓய கால்பந்துக் கழகம் 0 – 0 குரே விளையாட்டுக் கழகம்  

இரண்டாம் பாதியின் முதல் பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் கெலிஓய அணி வீரர் ஓடேய் எவன்ஸ் மூலம் வலது பக்கத்தால் உள்ளனுப்பப்பட்ட பந்தை ஒபியாரா ஜோன் தலையால் முட்டி கோலாக்க முயன்றபோது பந்தானது குரே அணியின் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது. மீண்டும் கெலிஓய அணியின் மத்திய களத்திலிருந்த முஜாஹித் அஹமடிடம் பந்து சென்றது. அவர் பந்தை பெற்று கோலை நோக்கி வேகமாக உதைந்தார். விரைவாக செயற்பட்ட குரே அணியின் கோல் காப்பாளர் பந்தை சிறந்த முறையில் தடுத்தார்.  

பதுளையில் திஹாரிய யூத் அணி வீரர்கள் மீது தாக்குதல்

இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 ( பிரிவு 1) கால்பந்து சுற்றுப்போட்டியில், கெலிஓய..

போட்டியின் 58 ஆம் நிமிடத்தில் முஜாஹித் அஹமட், தனக்கு மத்திய களத்தில் வழங்கப்பட்ட பந்தை வேகமாக கோலை நோக்கி உதைந்தார். உதையப்பட்ட பந்தை குரே அணியின் கோல் காப்பாளர் கைப்பற்ற முயன்ற போது, பந்தானது கோல் காப்பாளரின் கைகளில் பட்டு மீண்டும் கெலிஓய அணி வீரர் மஞ்சுல பிரசன்னவை நோக்கிச் சென்றது. அதனை கோலாக்கும் முயற்சியில் மஞ்சுல உதைந்தபோதும் குரே அணியின் பின்கள வீரர்களால் மீண்டும் பந்து தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 73ஆம் நிமிடத்தில் குரே அணி வீரரான விஜய் பாஸ்கரன், தான் பெற்ற பந்தை நீணட தூரப் பரிமாற்றம் மூலம் விஜித பெர்னாண்டோவிற்கு வழங்கினார். பந்தை பெற்ற விஜித, கெலிஓய அணியின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பினார். அதனைப் பெற்ற மதுரங்க ஹெரத், விரைவாக தரங்க விஜயசிரிக்கு வழங்க, தரங்க சிறந்த முறையில் பந்தைப் பெற்று கோலின் வலது பக்க மூலையால் பந்தை கோலுக்குள் செலுத்தினார். இதன் மூலம் குரே அணி போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

போட்டியை சமப்படுத்துவதற்காக விரைவாக செயற்பட்ட கெலிஓய அணிக்கு, போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோணர் வாய்ப்பை பயன்படுத்திய அவ்வணி வீரர் மதுசங்க சில்வா தனது தலையால் முட்டி பந்தை கோலை நோக்கி உள்ளனுப்ப முயற்சி செய்தபோது, குரே அணியின் பின்கள வீரர்களால் பந்து தடுக்கப்பட்டது.

பந்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின்போது பெனால்டி எல்லையில் பந்து எதிரணி வீரர்களின் கைகளில் பட்டதாக கூறப்பட்டு கெலிஓய அணி வீரர்களால் பெனால்டி வாய்ப்புக்காக கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நடுவர் அவ்வேண்டுகோளை ஏற்கவில்லை.  

முயற்சியை கைவிட விரும்பாத கெலிஓய அணிக்கு போட்டியின் 80ஆவது நிமிடத்தில் மத்திய களத்தின் வலது பக்க மூலையில் ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அதனைப் பெற்ற ஓடேய் எவன்ஸ் பந்தை கோலை நோக்கி வேகமாக உதைந்தார். பந்தானது இடது பக்க மூலையால் கோலினுள் செல்ல முயன்ற போது, குரே அணியின் கோல் காப்பாளர் அதனைப் பாய்ந்து தடுத்தார்.

மீண்டும் போட்டியின் 85ஆம் நிமிடத்தில் கெலிஓய அணி வீரர் முஹமட் ஆசிக் உள்ளனுப்பிய பந்தை பெற்ற முஜாஹிட் அஹமட் மத்திய களத்திலிருந்து கோலை நோக்கி உதைந்தார். எனினும் குரே பின்கள வீரர்கள் பந்தை தடுத்தனர்.

முன்னிலையில் இருந்த குரே அணியின் அனைத்து வீரர்களும் பின்களத்திலிருந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

எனினும், 88ஆம் நிமிடத்தில் குரே அணியின் பின்கள வீரரால் பரிமாற்றம் செய்யப்பட்ட பந்தை பெற்ற மதுரங்க ஹேரத் மத்திய களத்திலுள்ள வீரர்களை சிறந்த முறையில் கடந்து, பெனால்டி எல்லை வரை பந்தை கொண்டு சென்றார். எனினும் கெலிஓய அணியின் பின்கள வீரர்களால் பந்து தடுக்கப்பட்டது.

இதன்போது எதிர் தரப்பினர் பந்தை முறையற்ற முறையில் தடுத்ததாக கூறி பெனால்டிக்கான வாய்ப்பு வழங்குமாறு குரே அணி வீரர்களால் நடுவரிடம் வேண்டுகோள் விடடுக்கப்பட்டது. எனினும் நடுவர் அவ்வேண்டுகோளை ஏற்க மறுத்தார்.

இறுதியில் போட்டி நிறைவடைவதற்காக நடுவரால் சமிக்ஞை காண்பிக்கப்பட, தரங்க விஜயசிரியின் கோலினால் குரே விளையாட்டுக் கழகம் போட்டியை வெற்றி கொண்டது.

முழு நேரம்: கெலிஓய கால்பந்துக் கழகம் 0 – 1 குரே விளையாட்டுக் கழகம்  

கோல் பெற்றவர்கள்
குரே விளையாட்டுக் கழகம் – தரங்க விஜயசிரி 73’

மஞ்சள் அட்டை
குரே விளையாட்டுக் கழகம் – மாரன் பிரிஜிஸ் 33’, சிசிற ராஜவன்ஸ 39’, விஜய பாஸ்கரன் 82’
கெலிஓய கால்பந்துக் கழகம் – முஹமட் ஆசிக் 60’