டொட்டன்ஹாமை வீழ்த்தி லிவர்பூர் தொடர்ந்து ஆதிக்கம் : முன்னேற்றம் கண்ட யுனைடட்

36
 

இங்கிலாந்து ப்ரீமியர்  லீக் கால்பந்து தொடரின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு, 

லிவர்பூல் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்

டொட்டன்ஹாம் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் இடைவெயில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 

ப்ரீமியர் லீக்கில் முதலிடத்தை நெருங்கும் மன்செஸ்டர் சிட்டி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A தொடர்களின் …….

அன்பீல்டில் நடைபெற்ற போட்டியின் 48ஆவது வினாடியிலேயே ஹொட்ஸ்பர் அணியின் ஹரி கேன் கோல் புகுத்தினார். சொன் ஹியுங் மின் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டுவர அதனை தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார் ஹரி கேன். 

தொடர்ந்து கோல் காப்பாளர் போல் கஸ்ஸானிக்கா ஒருசில அபார தடுப்புகளை செய்ததால் முதல் பாதி முடிவின்போது டொட்டன்ஹாம் 1-0 என முன்னிலை பெற்றது. 

எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து ஆறாவது நிமிடத்தில் ஜோர்டன் ஹன்டர்சன் பெற்ற கோலின் உதவியோடு லிவர்பூல் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது. 

இந்நிலையில் 74 ஆவது நிமிடத்தில் சாடியோ மானேவை செர்ஜ் அரிர் கீழே வீழ்த்த அதன் மூலம் கிடைத்த பெனால்டியை மொஹமட் சலாஹ் எந்த தவறும் இன்றி கோலாக மாற்றி லிவர்பூலை வெற்றிபெறச் செய்தார். 

ஆர்சனல் எதிர் கிறிஸ்டல் பெலஸ்

கிறிஸ்டல் பெலசுக்கு எதிராக இரண்டு கோல்களால் முன்னிலை பெற்ற ஆசர்னல் அணி போட்டியை சமநிலையுடன் முடித்துக் கொண்ட நிலையில் அந்த அணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 

ஏற்கனவே ஷெபில்ட் ஷீல்டிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த நிலையில் இந்த போட்டியின் முடிவு ஆர்சனல் முகாமையாளர் யுனை எமரி மீதான அழுத்தம் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.  

தனது சொந்த மைதானமான எமிரேட் அரங்கில் நடைபெற்ற போட்டியின் ஒன்பது நிமிடங்களுக்குள் ஆர்சனல் 2-0 என முன்னிலை பெற்றது. நிகலஸ் பெபே மூலம் கிடைத்த கோனர் கிக்குகளைக் கொண்டு 106 வினாடி இடைவெளியில் சோக்ரடிஸ் பபஸ்டதோபோலஸ் மற்றும் டேவிட் லுவிஸ் கோல் புகுத்தினர். 

எனினும் 32 ஆவது நிமிடத்தில் வைத்து பெனால்டி பகுதியில் வில்பிரைட் சாஹா கீழே விழுந்த நிலையில் வீடியோ நடுவர் உதவி மூலம் கிறிஸ்டல் பெலசுக்கு கிடைத்த பெனால்டியை லூகா மிலிஜோவிக் கோலாக மாற்றினார்.  

இந்நிலையில் இரண்டாவது பாதியை வலுவுடன் ஆரம்பித்த கிறிஸ்டல் பெலஸ் ஜெம்ஸ் மக்துர் தொலைதூரத்தில் இருந்து பரிமாற்றிய பந்தை ஜோர்டன் அயெவ் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் போட்டியை சமன் செய்தது. 

ப்ரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் நான்கு புள்ளிகள் பின்தங்கி ஆர்சனல் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த எட்டு ப்ரீமியர் லீக் போட்டிகளில் அந்த அணி இரண்டில் மாத்திரமே வெற்றியீட்டியுள்ளது. 

மன்செஸ்டர் யுனைடட் எதிர் நோர்விச் சிட்டி

நோர்விச் சிட்டியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடட் தனது சொந்த மைதானத்திற்கு வெளியே கடந்த பெப்ரவரிக்கு பின்னர் முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது.   

வரலாற்று வெற்றியுடன் தங்கத்தை தமதாக்கிய வட மாகாண உதைபந்து அணி

45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிக்கட்ட ……

ஸ்கொட் மக்டொமினாய் மற்றும் மார்கஸ் ரஷ்போர்ட் கோல்கள் மூலம் மன்செஸ்டர் யுனைடட் முதல் பாதியில் முன்னிலை பெற்றது. இதில் 21 ஆவது நிமிடத்தில் மக்டொமினாய் பெற்ற கோல் மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக்கில் பெற்ற 2000 ஆவது கோலாக இருந்தது. 

எனினும், மன்வெஸ்டர் யுனைடட் தனக்கு கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளிலும் கோல் பெற தவறியது.  

இந்நிலையில் 73 ஆவது நிமிடத்தில் மார்சியல் பெற்ற கோல் மூலம் யுனைடட் அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. 88 ஆவது நிதிடத்தில் நோர்விச் சிட்டி வீரர் ஹெர்னன்டஸின் கோல் அந்த அணிக்கு ஆறுதலை மாத்திரமே அளித்தது. 

யுனைடட் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியில் தற்போது 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<