பொன்டிங்கின் கனவு ஐ.பி.எல் அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக லசித் மாலிங்க

5872

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளருமான ரிக்கி பொன்டிங் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் கடந்த பத்து பருவகாலப் போட்டிகளின் அடிப்படையில், அதில் திறமை காட்டிய வீரர்களை வைத்து எப்போதும் சிறப்பாக செயற்படக்கூடிய (All time best XI) ஒரு கனவு அணியை தெரிவு செய்துள்ளார்.

இந்த பருவகாலத்திற்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் போட்டிகள் நிறைவை எட்டிவருகின்ற இத்தருணத்தில் மிக்க அவதானத்துடன் வீரர்களின் செயற்திறன் பொன்டிங்கினால் ஆராயப்பட்டு, பதினொரு வீரர்கள் அடங்கிய இந்த குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் விதிமுறைகளுக்கு அமைவாக அத்தொடரில் விளையாடும் அணியொன்று நான்கு வெளிநாட்டு வீரர்களை மாத்திரமே கொண்டிருக்க வேண்டும். பொன்டிங் தேர்வு செய்திருக்கும் அணியில் இந்த நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த கால தொடர்களில் அற்புதமாக செயற்பட்டிருந்த மூன்று மேலதிக வெளிநாட்டு வீரர்களை அணியில் உள்ளடக்க முடியாத சிறப்பு வீரர்கள் என்னும் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் சேர்த்துள்ளார்.

தனது கனவு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலையும், அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னரையும் பொன்டிங் பெயரிட்டுள்ளார். இரு வீரர்களும் ஐ.பி.எல் போட்டிகளில் 40 ஓட்டங்கள் என்ற சராசரி ஓட்ட எண்ணிக்கையைக் கொண்டிருப்பதும் எந்த பந்து வீச்சாளராகக் காணப்படினும் சமாளித்து விரைவாக ஓட்டம் சேர்க்க கூடிய வீரர்களாக காணப்படுவதுமே பொன்டிங்கின் இந்த முடிவிற்கு காரணமாக அமைகின்றது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவரான விராட் கோஹ்லிக்கு அணியில் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக ஆட தனது கனவு அணியில் பொன்டிங் வாய்ப்பினை தந்திருக்கின்றார். கோஹ்லி எதிரணி வைக்கும் சவாலான வெற்றி இலக்கினை எட்டிப்பிடிப்பதில் வல்லவராக காணப்படுகின்றார் என்கிற காரணத்தினாலேயே இவ்வாய்ப்பினை வழங்கியதாக பொன்டிங் தெரிவித்திருந்தார்.

தான் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோஹித் ஷர்மாவுக்கும், சென்னை சூபர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளிற்காக ஆடியிருந்த சுரேஷ் ரெய்னா ஆகியோர் கனவு அணியில் முறையே நான்காம் மற்றும் ஐந்தாம் இலக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்பது பொன்டிங்கின் அவாவாக காணப்படுகின்றது. இந்த இரண்டு வீரர்களும் மத்திய வரிசையினை பலப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் என்கிற காரணத்தினாலேயே அவர்கள் இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தனது அணிக்கு தலைவர் யார் எனத்தெரிவு செய்வதில் தீர்க்கமான முறையில் செயற்பட்டு முடிவெடுத்த பொன்டிங், அதற்கு முழுத் தகுதியானவர் இந்திய அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி என்று கூறியிருக்கின்றார். அவர் துடுப்பாட களமிறங்கும் சந்தர்ப்பங்களில் அவர் சார்பான அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதன் காரணமாகவே அணித்தலைவர் பொறுப்பு வழங்க எத்தனித்திருந்ததாகவும், பொன்டிங் கூறியிருந்தார். அத்தோடு சிறந்த களத்தடுப்பு காரணமாக அணியின் விக்கெட் காப்பாளர் பொறுப்பும் தோனிக்கே சேர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கனவு அணியின் பந்து வீச்சு துறையினை முன்னெடுப்பதற்காக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் வேகப்பந்து வீச்சாளர்களில் வெளிநாட்டு வீரர்களாக காணப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவேய்ன் பிராவோ மற்றும் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான லசித் மாலிங்க ஆகியோர் அணியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் ப்ராவோ சில நேரங்களில் தனது துடுப்பாட்ட மட்டை மூலம் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவராக காணப்படுவதோடு, பந்தின் வேகங்களை சடுதியாக மாற்றி எதிரணிக்கு பல முறை சவால் விட்டு செயற்பட்டு இருப்பதே, ஏனைய பல வீரர்கள் இருந்தும் ப்ராவோவினை பொன்டிங் தெரிவு செய்ய காரணமாக அமைகின்றது.

இந்தியன் பிரிமியர் லீக் ஆரம்பித்த காலத்தில் இருந்து மும்பை அணிக்காக மாத்திரம் விளையாடி வரும் மாலிங்க, T-20 பந்து வீச்சாளர்களில் அதி சிறந்த வீரர் என்று புகழாரத்தினை பொன்டிங் சூட்டியிருகின்றார். மேலும், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை துல்லியமான யோர்க்கர் மூலம் வீழ்த்தும் ஆற்றல் கொண்டிருக்கும் மாலிங்க பவர் ப்ளே ஓவர்களிலும் எதிரணியினை கட்டுப்படுத்தும் வகையில் செயற்படக்கூடியவர் என பொன்டிங்கினால் மேலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறான காரணங்களினாலேயே மாலிங்க, பொன்டிங்கின் கனவு அணியில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.

மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்திய பிரிமியர் லீக் தொடரில் இதுவரையில் ஐந்து அணிகள் வரையில் பரிமாற்றப்பட்டு விளையாடியிருக்கும் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவு செய்யப்பட்டிருந்தார். பல இக்கட்டான நிலைகளில் சாமர்த்தியமான முறையில் செயற்பட்ட காரணத்திற்காகவே பொன்டிங்கினால் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் பருவகாலத்தில் அதிக விக்கெட்டுகளை  சாய்த்த வீரர்களில் ஒருவராக காணப்படும் அமித் மிஷ்ராவிற்கும் சில வேளைகளில் துடுப்பாட்ட வீரராக அசத்தும் அனுபவமிக்க ஹர்பஜன் சிங்கிற்கும் அணியின் சுழல் பந்துவீச்சு துறையினை மேம்படுத்த பொன்டிங்கினால் கனவு அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.  

பொன்டிங்கின் கனவு அணியில் சேர்க்கப்படாவிட்டாலும், இதுவரை நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் அபார ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த வெளிநாட்டு வீரர்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனீல் நரேன், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஏ.பி.டி வில்லியர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடி வரும் ப்ரென்டன் மெக்கலம் ஆகியோரும் பொன்டிங்கினால் சிறப்பு வீரர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

பொன்டிங்கின் கனவு ஐ.பி.எல் அணிக் குழாம்: கிறிஸ் கெய்ல், டேவிட் வோர்னர், விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மஹேந்திர சிங் தோனி, டுவேய்ன் ப்ராவோ, ஹர்பஜன் சிங், அமித் மிஷ்ரா, லசித் மாலிங்க, ஆஷிஸ் நெஹ்ரா

அணியில் உள்ளடக்க முடியாத வெளிநாட்டு வீரர்கள்: சுனீல் நரேன், ஏ.பி.டி வில்லியர்ஸ், ப்ரெடன்டன் மெக்கலம்