சௌத் சக்கீலின் கன்னி இரட்டைச்சதத்தோடு இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் பாகிஸ்தான் அணியானது வலுவான நிலையினை அடைந்திருக்கின்றது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் நேற்று (17) பாகிஸ்தான் அணியானது 221 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த சௌத் சகீல் 69 ஓட்டங்களையும், அகா சல்மான் 61 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று (18) 91 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது மூன்றாம் நாளின் மதிய போசணம் வரை சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் அணியின் ஆறாம் விக்கெட்டாக அகா சல்மான் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கும் போது தன்னுடைய 4ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்திருந்த அகா சல்மான் 09 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 83 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் அகா சல்மான் பாகிஸ்தானின் ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக 177 ஓட்டங்கள் எடுத்திருந்ததோடு, இது பாகிஸ்தான் வீரர்கள் காலி மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாகவும் பதிவானது.
அகா சல்மானின் பின்னர் சதம் கடந்திருந்த சௌத் சக்கீல் அணியின் பின்வரிசை வீரர்களான நஷீம் ஷா மற்றும் நோமான் அலி ஆகிய இரண்டு வீரர்களுடனும் பெற்ற இணைப்பாட்டங்கள் மூலம் மூன்றாம் நாளின் மூன்றாம் இடைவேளை வரை ஆட்டத்தினைக் கொண்டு சென்றதோடு இறுதியில் பாகிஸ்தான் அணியானது சௌத் சக்கீலின் கன்னி டெஸ்ட் இரட்டைச் சதத்தோடு 121.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 461 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த சௌத் சக்கீல் 361 பந்துகளில் 19 பௌண்டரிகள் அடங்கலாக 208 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் சௌத் சக்கீல் நோமான் அலியுடன் (25) பாகிஸ்தான் அணியின் 7ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 52 ஓட்டங்களையும், நஷீம் ஷாவுடன் (06) பாகிஸ்தான் அணியின் 9ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 94 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 136 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸை அடுத்து 149 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 14 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி காணப்படுகின்றது. பாகிஸ்தானை விட 135 ஓட்டங்கள் தற்போது பின்தங்கி காணப்படும் இலங்கை அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் நிஷான் மதுஷ்க 08 ஓட்டங்களையும், திமுத் கருணாரட்ன 06 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.