ஆசியக் கிண்ணத் தொடருக்கான ஓமான் குழாம் அறிவிப்பு

Men's Asia Cup 2025

5
Oman squad for Asia Cup 2025

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக பங்கேற்கவுள்ள இந்திய வம்சாவளி வீரர்  ஜதிந்தர் சிங் தலைமையிலான ஓமான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் இம்முறை ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 5 அணிகள் தங்களது குழாம்களை அறிவித்துள்ள நிலையில், 6ஆவது அணியாக ஓமான் அணியும் தங்களது 17 பேர் கொண்ட குழாத்தை அறிவித்துள்ளது.

ஓமான் அணியின் தலைவராக இந்திய வம்சாவளி வீரரான ஜதீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 36 வயதான இவர் ஓமான் அணிக்காக 61 ஒருநாள் போட்டிகளிலும், 64 T20I போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், இம்முறை ஆசியக் கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஓமான் குழாத்தில் நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சுப்யான் யூசுப், ஜிக்ரியா இஸ்லாம், ஃபைசல் ஷா மற்றும் நதீம் கான் ஆகிய நால்வரும் முதல் தடவையாக ஓமான் அணிக்காக ஆடவுள்ளனர்.

இதனிடையே, இலங்கை அணியின் முன்னாள் வீரரான துலீப் மெண்டிஸ் ஓமான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகின்ற நிலையில், இம்முறை ஆசியக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடுவது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “ஆசியக் கிண்ணத் தொடர் எமது வீரர்களுக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். மேலும், எமது வீரர்களின் திறமையை உலகளவில் வெளிப்படுத்த இது சிறந்த தருணம். குறிப்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவது எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணமாகும். T20 போன்ற போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” எனத் தெரிவித்தார்.

இம்முறை ஆசியக் கிண்ணத்தில் ஓமான் அணி போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் A பிரிவில் இடம்பெற்றுள்ளதுடன், ஓமான் தனது முதல் போட்டியில் செப்டம்பர் 12 ஆம் திகதி பாகிஸ்தனை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கிண்ணத்துக்கான ஓமான் அணி விபரம்: குழாம்

ஜடின்தர் சிங் (தலைவர்), ஹம்மாத் மிர்சா, வினாயக் ஷுக்லா, சுப்யான் யூசுப், அஷிஷ் ஒதேதரா, ஆமிர் கலீல், மொஹமட் நதீம், சுப்யான் மஹ்மூத், ஆர்யான் பிஷ்த், கரன் சொனவலே, ஜிக்ரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, ஃபைசல் ஷா, முஹமது இம்ரான், நதீம் கான், ஷகீல் அஹமது, சமை ஷ்ரிவஸ்தாவா.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<