உலக கெரம் சம்பியன்ஷிப்பில் ஹில்மிக்கு 2 பதக்கங்கள்

76

மலேசியாவில் நடைபெற்றுவரும் 8ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துள்ளது.

இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முன்னாள் உலக கெரம் சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீட் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை வென்று கொடுத்தனர்.

செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 2 – 1 ப்ரேம்கள் கணக்கில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தைப் பிடித்தது. முன்னதாக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 2 – 1 ப்ரேம்கள் கணக்கில் இந்தியாவிடம் இலங்கை அணி வீரர்கள் தோல்வியைத் தழுவியிருந்தனர்.

இதனிடையே, புதன்கிழமை (05) நடைபெற்ற சுவிஸ் லீக் போட்டியில் பங்குகொண்ட ஷஹீட் ஹில்மி வெண்கலப் பதக்கம் வென்றார். 8 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதல் 7 சுற்றுக்களிலும் வெற்றியீட்டி முதலிடத்தைப் பிடித்த அவர், கடைசி சுற்றில் இந்திய வீரர் மொஹமட் குர்பானிடம் தோல்வியைத் தழுவினார்.

இம்முறை உலக கெரம் சம்பியன்ஷிப்பில் சுவிஸ் லீக் போட்டியில் சுமார் 129 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் 16 பேர் இந்திய வீரர்களாவர். அதிலும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல வீரர்களான சந்தீப் திவ் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகிய இருவரையும் ஷஹீட் ஹில்மி வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றேயால் கல்லூரியின் பழைய மாணவரான ஷஹீட் ஹில்மி, இலங்கையின் நடப்பு தேசிய கெரம் சம்பியனாக வலம் வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இம்முறை உலக கெரம் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான குழுநிலை இறுதிப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி தகுதி பெற்றது.

அதிலும் பலம் வாய்ந்த பங்களாதேஷை 02-01 என தோற்கடித்து தகுதி பெற்றுள்ளது. அவர்கள் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக மோதவுள்ளனர்.

இலங்கை அணி வீரர்கள் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் ஆகிய அணிகளை தோற்கடித்து தங்களது குழுவில் முன்னிலை பெற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான அரை இறுதிக்கு தகுதிபெற்றனர். அதில் பங்களாதேஷ் அணியை 2 – 1 ப்ரேம்கள் கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியது.

அதேநேரம், பெண்களுக்கான குழுநிலைப் போட்டியில் அனுபவம் வாய்ந்த மாலைத்தீவு மகளிர் அணியை 2 – 1 ப்ரேம்கள் என்ற கணக்கில் இலங்கை மகளிர் அணி தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை இலங்கை சந்திக்கவுள்ளது.

8ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 3ஆம் திகதி மலேசியாவில் ஆரம்பமாகியது. இலங்கை உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 250 கெரம் போட்டியாளர்கள் இம்முறை போட்டித் தொடரில் பங்குபற்றியுள்ளனர்

இதில் இலங்கை சார்பில் 4 வீரர்களும் 4 வீராங்கனைகளும் பங்குபற்றுகின்றனர். ஆண்கள் அணியில் நிஷான்த பெர்னாண்டோ, சுராஜ் மதுவன்த, ஷஹீட் ஹில்மி, உதேஷ் சந்திம பெரேரா ஆகியோரும் பெண்கள் அணியில் ரொஷிட்டா ஜோசப், தஷ்மிலா காவிந்தி, ரெபேகா டெல்ரின் மற்றும் மதுவன்தி குணதாச ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடைவ நடைபெறுகின்ற உலக கெரம் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 2012இல் இலங்கையில் நடைபெற்றதுடன், இதில் ஆண்கள் தனிநபர் பிரிவில் நிஷான்த பெர்னாண்டோ சம்பியன் பட்டம் வென்றார். அதேபோல 2016 இல் நடைபெற்ற உலக கெரம் சம்பியன்ஷப்பில் அணிகள் பிரிவில் இலங்கை ஆண்கள் அணி சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<