கால்பந்தாட்ட உலகில் வளரும் இளம் நட்சத்திரம் சான்சேஸ்

236
Renato Sanches

யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் 2016இல் இறுதி 16 சுற்றில் குரேஷியா அணிக்கு எதிராக கலக்கிய இளம் கால்கள் காலிறுதியில் போலந்தை வெளியேற்றியது, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரரான 18 வயது போர்த்துக்கல் வீரர் ரெனேட்டோ சான்சேஸ் போர்த்துக்கல் கால்பந்தின் எதிர்காலம் எனும் அளவுக்கு நிபுணர்களால் உயர்வாக கருதப்படுகிறார்.

சான்சேஸ் தனது கால்பந்து கழக வாழ்க்கையை பென்ஃபிகா மூலம் தொடங்கினார். 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் ரிசர்வ்களுக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார். பென்பிகாவுக்கு 2015இல் இவர் ஆடிய போதுதான் அந்த பிரிமியர் லீக் மற்றும் ல லீகா தொடர்களில் சம்பியன் பட்டம் வென்றது. பிறகு ஜெர்மன் கழகமான பேயர்ன் மூனிக்கிற்கு இவர் 38.8 மில்லியன் டொலர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இளையோர் மட்ட ஆட்டத்தில் போர்த்துக்கல்லுக்காக 40 ஆட்டங்களில் ஆடி 8 கோல்களை அடித்துள்ளார் சான்சேஸ். மார்ச் 2016-ல் தான் இவர் சர்வதேச கால்பந்து போட்டியில் அறிமுகமாகிறார். தற்போது 18 வயதில் அவர் UEFA யூரோ 2016 தொடரில் நுழைந்து சர்வதேச தொடரில் நுழையும் இளம் வீரர் என்ற சாதனைக்கு
உரியவரானார்.

தனது 8ஆவது வயதிலேயே கால்பந்தில் நுழைந்த சான்சேஸ் பெனிபிகா அணியின் இளையோர் குழுவில் தனது 9ஆவது வயதிலேயே இணைந்தார். படிப்படியாக தனது அதிரடி ஆட்டத்தினால் இவரை பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் போர்த்துக்கல் மூத்தோர் அணியில் நுழைத்தார்.

ஜூன் 14ஆம் திகதி இடம் பெற்ற ஐஸ்லாந்துக்கு எதிரான 1-1 என்று சமநிலையில் முடிந்த போட்டியில் கடைசி 19 நிமிடங்களுக்காக மவுட்டின்ஹோவுக்குப் பதிலாக இறங்கி ஆடினார். குரேஷியா அணிக்கு எதிராக நடப்பு யூரோ 2016 தொடரில் இறுதி 16 சுற்றில் கலக்கிய சான்சேஸ் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

காலிறுதியில் கடினமான போலந்து தடுப்பணையை நானியுடன் ஒன்றிரண்டு முறை தட்டி ஆடி பிறகு இடது காலால் அடித்த ஷாட் கோல் ஆனது. இது போட்டியை சமன் செய்த கோல் ஆகும். பிறகு பெனால்டி ஷூட் அவுட்டில் ரொனால்டோவுக்கு அடுத்தது யார் ஷூட் செய்கிறார்கள் என்று பயிற்சியாளர் சாண்டோஸ் கேட்ட போது தானாகவே முன் வந்து கோல் ஷூட் செய்தார் சான்சேஸ். பின் மீண்டும் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

நடுக்களத்தில் வேகமாக இயங்கும் கால்கள் உடையவர் சான்சேஸ். தடுப்பாட்டம் தாக்குதல் ஆட்டம் என்று எந்த பணியைக் கொடுத்தாலும் அதனை ஏற்று அதில் சாதிக்கத் துடிக்கும் இளம் நட்சத்திரமாவார் சான்சேஸ். இவர் ஆடும் போது 18 வயது வீரர் ஆடுவது போல் இருக்காது, ஏனெனில் பாஸ்களில் அத்தனை துல்லியம், சாதுரியம் மற்றும் டிரிப்பிளிங்கில் அச்சுறுத்தும் வகையிலான நகர்வு, கோல் ஷூட் செய்யும் தைரியம் மற்றும் துல்லியம் ஆகியவை இவரது பிரகாசமான எதிர்காலத்திற்குரிய பண்புகள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் சிறு வயதில் தானே பந்தை எடுத்துச் சென்று கோல் அடிக்க ஆவல் அதிகமாக இருக்கும், கோல்களை அடிக்கும் இளம் ஆர்வத்தில் நீண்ட தூரத்திலிருந்தே கோல் முயற்சி செய்யும் ஆர்வம் மிகுதியாக இருக்கும், ஆனால் இத்தகைய குணங்கள் எதுவுமின்றி அவர் அணியின் ஒரு அங்கமாக பாஸ்களை நம்புவது ஆச்சரியமாகவே உள்ளது.

இவரைப்பற்றி பயிற்சியாளர் சாண்டோஸ் கூறும்போது, “ரெனாட்டோ சான்சேஸ் அதிசயிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று பார்த்தது ஒரு சிறு துளிதான் அவர் மூலம் பெருவெள்ளம் காத்திருக்கிறது.
நான் ரிகார்டோ கார்வால்ஹோ 18 வயதில் ஆடியபோதும் இதையேதான் கூறினேன். இன்னும் கொஞ்சம் அனுபவம் கூடினால் இவர் ஒரு அச்சுறுத்தும் அபாய வீரர்காக உருவெடுப்பார்” என்று கூறியுள்ளார்.
இளம் வயதில் கலக்கும் ரெனாட்டோ சான்சேஸ் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தனது 19ஆவது வயதில் காலடி எடுத்து வைக்க உள்ளார் என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.