காலி அணிக்கெதிராக நடைபெற்று வருகின்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அபிஷேக் லியனாரச்சி, மினோத் பானுக ஆகியோர் பெற்றுக்கொண்ட அரைச் சதங்கள் மற்றும் வனிந்து ஹஸரங்கவின் அபார பந்துவீச்சு என்பவற்றின் உதவியுடன் தம்புள்ள அணி முன்னிலை பெற்றுக் கொண்டது.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (02) ஆரம்பமாகியது.
மினோத் பானுக தமையிலான தம்புள்ள அணியும், சங்கீத் குரே தலைமையிலான காலி அணியும் இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற காலி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தம்புள்ள அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் லியனாரச்சி அரைச் சதம் கடந்து பெற்றுக் கொண்ட அரைச் சதம் (54) மற்றும் அணித்தலைவர் மினோத் பானுகவின் அரைச் சதம் (50) என்பவற்றின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைக் குவித்தது.
தம்புள்ள அணிக்காக இம்முறை போட்டித் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்ற மினோத் பானுக தனது 4ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன், தனது அறிமுகப் போட்டியில் ஆடி 20 வயது இளம் வீரர் அபிஷேக் லியனாரச்சி கன்னி அரைச் சதத்தைப் பதிவு செய்தார்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 26 ஓட்டங்களை எடுத்து தடுமாறியிருந்தது.
காலி அணியின் முன்வரிசை வீரர்களான சொஹான் டி லிவேரா (7), சங்கீத் குரே (2), துனித் வெல்லாலகே (3) என நால்வரும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியிருந்தனர். தம்புள்ள அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளையும், லஹிரு சமரகோன் மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.
இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.