இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் 2ஆம் நாள் ஆட்டங்கள் இன்று (17) நிறைவுக்கு வந்தன.
இதில ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் காலி அணியின் சொஹான் டி லிவேரா சதமடித்து அசத்ததினார். மறுபுறத்தில் காலி அணிக்கெதிரான 2ஆவது இன்னிங்ஸில் ஜப்னா அணி வீரர்களாhன ரொன் சந்திரகுப்த (86) மற்றும் அவிஷ்க தரிந்து (59) ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்தனர்.
அதேபோல, தம்புள்ள அணிக்கெதிரான போட்டியில் கொழும்பு அணியின் கிரிஷான் சன்ஜுல 57 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தார்.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் கொழும்பு அணியின் ஹிமேஷ் ராதநாயக, தம்புள்ள அணியின் லஹிரு சமரகோன் மற்றும் ஜப்னா அணியின் ஷசிக துல்ஷான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகியிருந்த இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா, இன்றைய தினம் கொழும்பு அணிக்காக களமிறங்கினார்.
சத்திர சிகிச்சைக்குப் பிறகு முதல் தடவையாக தொழில்முறை கிரிக்கெட்டில் களமிறங்கிய குசல் பெரேரா, 3ஆம் இலக்க வீரராக வந்து முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார். அவரது விக்கெட்டை லஹிரு சமரகோன் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்னா எதிர் காலி
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் தமது முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்த காலி அணி சொஹான் டி லிவேராவின் சதத்தின் உதவியோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது.
ஜப்னா அணியின் பந்துவீpச்சில் ஷசிக துல்ஷான் 4 விக்கெட்டுகளையும், பினுர பெர்னாண்டோ மற்றும் லஹிரு மதுசங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து, 128 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஜப்னா அணி, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை எடுத்து 81 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் அஷான் பிரியன்ஜனின் அபார சதம் மற்றும் மினோத் பானுகவின் அரைச் சதத்தின் உதவியோடு கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ள அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் 2ஆம் நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தம்புள்ள அணி முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 341 ஓட்டங்களை எடுத்தது.
கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் அஷான் பிரியன்ஜன் 114 ஓட்டங்களையும், மினோத் பானுக 73 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
கொழும்பு அணியின் பந்துவீச்சில் ஹிமேஷ் ராமநாயக 4 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் கிரிஷான் சன்ஜுல 57 ஓட்டங்களையும், நவிந்து நிர்மால் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
தம்புள்ள அணியின் பந்துவீச்சில் லஹிரு சமரகோன் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இரண்டு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (18) தொடரும்.