ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஆப்கான் நட்சத்திரம்

54

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை பெறுவதாக ஆப்கானிஸ்தானின் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மொஹமட் நபி அறிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் அணியானது தற்போது பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டில் ஆப்கானிஸ்தான் அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. 

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அரைச்சதம் கடந்து அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்கினை வகித்த சகலதுறை வீரர் மொஹமட் நபி தனது ஓய்முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தகையில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார் 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நஸீப் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவர் தொடர்ந்து T20i போட்டிகளில் விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மொஹமட் நபி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு இதை எங்களிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், T20i போட்டிகளில் அவர் விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன் என அவர் கூறினார். 

தற்போது 39 வயதாகும் மொஹமட் நபி, 2009ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்துக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் அரைச் சதம் அடித்து அசத்தினார். 2019இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அந்தவகையில் இதுவரை 165 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள மொஹமட் நபி, அதில் 2 சதங்கள் மற்றும் 17 அரைச் சதங்கள் என மொத்தமாக 3549 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதேபோல, 171 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் 

இது தவிர, ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராகவும் மொஹமட் நபி சிறப்பாக செயல்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<