மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

173
Moeen Ali
@Getty Images

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த தொடரில் விளையாட எதிர்பார்க்கப்படுகின்ற 30 பேர் அடங்கிய இங்கிலாந்து வீரர்கள் குழாம் பயிற்சிகள் பெறுவதற்காக இன்று (17) இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>> “ஜொப்ரா ஆர்ச்சருடன் நட்பு இல்லை” – கெமார் ரோச்

பயிற்சிகளுக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர்கள் குழாத்தில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து சொந்தக் காரணங்கள் கருதி நீண்ட இடைவெளி ஒன்றினை எடுத்துக் கொண்ட சகலதுறை வீரரான மொயின் அலி இணைக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரிலேயே இங்கிலாந்து அணியினை இறுதியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் பிரதிநிதித்துவம் செய்த மொயின் அலி, தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் பயிற்சிக் குழாத்தில் இடம்பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணியினை தொடர்ந்தும் மூவகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரதிநிதித்துவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதேநேரம், விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ஜொன்னி பெயர்ஸ்டோவ் உம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க விருப்பம் காட்டியதனை அடுத்து அவருக்கும் பயிற்சிக் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெயர்ஸ்டோவ் தவிர ஜோஸ் பட்லர், பென் போக்ஸ் ஆகியோர் இங்கிலாந்தின் பயிற்சிக் குழாத்தில் இடம்பெற்றிருக்கும் மேலதிக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர்களாகக் காணப்படுகின்றனர்.

இவர்களோடு சேர்த்து இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வழமையாக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் ஏனைய முக்கிய வீரர்களாக பயிற்சிக் குழாத்தில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த கோடைகாலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, குறித்த சுற்றுப்பயணத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், பல புதுமுக வீரர்களுக்கும் இங்கிலாந்தின் பயிற்சிக் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி, இதுவரையில் டெஸ்ட் அறிமுகம் பெறாத 22 வயது துடுப்பாட்டவீரர் டேன் லோரன்ஸ், ஒல்லி ரொபின்சன், ஜேம்ஸ் பிரேசி ஆகிய வீரர்களுக்கும் அமர் வெர்தி, மேட் பாக்கின்ஸன், சகீப் மஹ்மூட், ஜேமி ஒவர்டன், கிரைக் ஒவர்டன், லூயிஸ் கிரேகோரி ஆகியோருக்கு தமது தாயக அணியினை டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. 

பயிற்சிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் வீரர்கள் குழாம் உயிரியல் பாதுகாப்பு வசதிகளுடனும், பார்வையாளர்கள் எவரும் இன்றியும் சௌத்தம்ப்படனிலுள்ள ஏஜியஸ் போல் அரங்கில் கிரிக்கெட் பயிற்சிகளைப் பெறவுள்ளது. பின்னர், ஜூலை மாதம் 1ஆம் திகதி இடம்பெறவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் இறுதிப் பதினொருவர்  தீர்மானிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>> இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆமிர், ஹரிஸ் சொஹைல்

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, சௌத்தம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் போல் மைதானத்தில் ஜூலை மாதம் 07ஆம் திகதி பார்வையாளர்கள் எவரும் இன்றி நடைபெறவிருப்பதோடு தொடரின் இரண்டாம், மூன்றாம் போட்டிகள் மன்செஸ்டர் நகரில் ஜூலை 16ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 

இதேவேளை, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் கடந்த வாரம் இங்கிலாந்து மண்ணை வந்தடைந்து தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து குழாம் – மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், ஜொன்னி பெயர்ஸ்டோவ், டொமினிக் பெஸ், ஜேம்ஸ் பிரேசி, ஸ்டுவார்ட் ப்ரோட், ரொரி பேன்ஸ், ஜோஸ் பட்லர், ஷேக் கிராவ்லி, சேம் கர்ரன், ஜோ டென்லி, பென் போக்ஸ், லூயிஸ் கிரகரி, கீட்டோன் ஜென்னிங்ஸ், டேன் லோரன்ஸ், ஜேக் லீச், சகீப் மஹ்மூட், கிரைக் ஒவர்டன், ஜேமி ஒவர்டன், மேட் பார்கின்ஸன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், ஜோ ரூட், டோம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், அமர் வெர்தி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<