ஹட்டன் நெஷனல் வங்கி அணிக்கு எதிராக கான்ரிச் பினான்ஸ் வெற்றி

112

பெயார் என்ட் லவ்லி மென் (Fair and Lovely Men) அனுசரணையோடு பிரிவு B வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் லீக் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டியொன்றில் கான்ரிச் பினான்ஸ் (B) அணி  ஹட்டன் நெஷனல் வங்கி அணியை டக்வத் லூவிஸ் முறையில் 22 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

முன்னதாக கட்டுநாயக்க மேரியன்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கான்ரிச் பினான்ஸ் அணியின் தலைவர் ராஜித அசரலாரச்சி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக பெற்றார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய கான்ரிச் பினான்ஸ் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 184 ஓட்டங்களையே பெற்றனர். கான்ரிச் பினான்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ப்ரமோத் மதுவந்த அரைச்சதம் ஒன்றினைக் கடந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், ஹட்டன் நெஷனல் வங்கி அணியின் பந்துவீச்சு சார்பாக நவீன் குணவர்தன 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் இக்ரம் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

ஒருநாள் தரவரிசையில் அதியுயர் முன்னேற்றம் கண்ட அகில தனன்ஜய

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 185 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஹட்டன் நெஷனல் வங்கி அணி 34 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியில் மழையின் குறுக்கீடு உருவானது.

தொடர்ந்தும் நிலைமை சீராகாத காரணத்தினால் போட்டியில் கான்ரிச் பினான்ஸ் அணி டக்வத் லூவிஸ் முறையில் 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஹட்டன் நெஷனல் வங்கி அணியின் துடுப்பாட்டம் சார்பாக அணித்தலைவர் மாதவ வர்ணபுர அதிகபட்ச ஓட்டங்களை (37) பெற்றிருந்ததுடன், கான்ரிச் பினான்ஸ் அணியின் பந்துவீச்சில் பூர்ண சாருக்க மற்றும் சானக்க தேவிந்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கான்ரிச் பினான்ஸ் – 184 (49.4) – ப்ரமோத் மதுவந்த 54, நவீன் குணவர்த்தன 25/4, மொஹமட் இக்ராம் 30/3, விமுக்தி பெரேரா 36/2

ஹட்டன் நெஷனல் வங்கி – 123/7 (34) – மாதவ வர்ணபுர 37, பூர்ண சாருக்க 20/2, சானக்க தேவிந்த 32/2

முடிவு – கான்ரிச் பினான்ஸ் அணி டக்வத் லூவிஸ் முறையில் 22 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<