இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 2025ஆம் ஆண்டின் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
>>ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025; வெல்லாலகே தலைமையில் இலங்கை<<
இந்த நிலையில், ஆஸி. குழாத்தில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மார்னஸ் லபுச்சேன் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றார். மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் வாய்ப்பினை இழந்த லபுச்சேன் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தியதனை அடுத்து அவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதேவேளை, இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சேம் கொன்ஸ்டாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, உள்ளூர் ஷெபீல்ட் ஷீல் தொடரில் சிறப்பாக பிரகாசித்திருந்த அறிமுக வீரர் ஜேக் வெதரால்ட் இற்கு அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உபாதை காரணமாக வழமையான தலைவர் பேட் கம்மின்ஸ் முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. எனவே, ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய குழாத்தினை தலைவராக வழிநடத்துவார். அத்துடன் புமுதுக வீரர்களான ஷோன் அப்போட், ப்ரெண்டன் டோக்கெட் ஆகியோரும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
நவம்பர் 21ஆம் திகதி பெர்த்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம்:
ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), ஷோன் அப்போட், ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கெரி, ப்ரண்டன் டோக்கெட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வூட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுச்சேன், நதன் லயன், மிச்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், போ வெப்ஸ்டர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















