கொல்கத்தா அணியில் இணையும் டிம் சௌதி

Indian Premier League 2021

87
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள IPL தொடரின் மிகுதிப்போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக, நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி விளையாடவுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய, அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ், மிகுதிப்போட்டிகளில் விளையாட மாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளதால், டிம் சௌதியை கொல்கத்தா அணி இணைத்துள்ளது.

தென்னாபிரிக்கா அணி இலங்கையை வந்தடைந்தது

தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில், விளையாடிய டிம் சௌதியை, கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், எந்த அணிகளும் வாங்கவில்லை. 2019ம் ஆண்டு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடியிருந்ததுடன், மோசமான பந்துவீச்சின் காரணமாக அடுத்த ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

டிம் சௌதி, கடந்த ஐ.பி.எல். தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்காக விளையாடியிருந்தார். இதில், மொத்தமாக 40 போட்டிகளில் விளையாடிய இவர், 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கொல்கத்தா அணி, அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மின்ஸை, இந்திய ரூபாயில் 15.5 கோடிக்கு வாங்கியிருந்தது. எனினும், டிம் சௌதியை எவ்வளவு தொகைக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

 IPL தொடரில் மிகுதியாக 31 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்திருக்கிறது. இவ்வாறான நிலையில், மற்றுமொரு நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பேர்கஸனுக்கு உதவியாக, டிம் சௌதி இருப்பார் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

IPL தொடரின் மிகுதிப்போட்டிகள் அடுத்த மாதம் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…