தேசிய நீச்சல் அரங்கில் 4 புதிய சாதனைகள் நிலைநாட்டிய கிமிகோ ரஹீம்

44

தேசிய குறுந்தூர நீச்சல் போட்டித் தொடரில் தெற்காசியாவின் அதிவேக நீச்சல் வீராங்கனையும், இலங்கை அணியின் தேசிய நீச்சல் வீராங்கனையுமான கிமிகோ ரஹீம், தான் பங்குபற்றிய 5 போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியதுடன், 4 போட்டிகளில் புதிய தேசிய சாதனையும் படைத்துள்ளார்.

தேசிய குறுந்தூர நீச்சல் போட்டித் தொடர் கடந்த 26ஆம் திகதி முதல் தொடர்ந்து 4 தினங்களாக நீர்கொழும்பு லொயலா கல்லூரி நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட மற்றும் திறந்த வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

கொழும்பு மரதனில் அசத்திய இலங்கை – வெனிசுவேலா ஜோடியின் ஒலிம்பிக் கனவு

கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன் அமைப்பு ஏற்பாடு செய்த…

போட்டித் தொடரின் முதல் நாளில் பெண்களுக்கான 400 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட கிமிகோ ரஹீம், போட்டியை 4 நிமி. 20:23 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்தார். எனினும், குறித்த போட்டியில் தனது சகோதரியான மச்சிகோ ரஹீம், போட்டியை 4 நிமி. 30:46 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்று 2014இல் நிகழ்த்தப்பட்ட போட்டிச் சாதனையை முறியடித்தார்.  

இந்நிலையில், அன்றைய தினம் மாலை நடைபெற்ற 200 மீற்றர் கலப்பு நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட கிமிகோ ரஹீம், போட்டியை 2 நிமி. 21:97 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அத்துடன் 2014ஆம் ஆண்டு கிமிகோ ரஹீம் மூலம் நிகழ்த்தப்பட்ட (2 நிமி. 24:97 செக்கன்கள்) சாதனையையும் இதன்போது அவரே முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kimiko raheemஇதனையடுத்து போட்டித் தொடரின் 2ஆவது நாளில் 100 மீற்றர் சாதாரண நீச்சலில் கலந்துகொண்ட அவர், போட்டியை 56.31 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்தார். அத்துடன் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் குறித்த போட்டியில் 57.20 செக்கன்களில் நிறைவுசெய்து நிகழ்த்திய அவரது தனிப்பட்ட சாதனையையும் அவர் முறியடித்திருந்தார்.

அத்துடன் போட்டியின் 3ஆவது நாளில் பெண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட கிமிகோ, 2 நிமி. 04:97 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

நெதர்லாந்து சர்வதேச குத்துச்சண்டையில் இலங்கைக்கு 2 தங்கங்கள்

நெதர்லாந்தின் நடைபெற்ற இந்தோவன் (EINDHOVEN)…

மேலும், நேற்று நடைபெற்ற (29) பெண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியிலும் கலந்துகொண்டு 26.16 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தனது சொந்த சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

18 வயதான கிமிகோ ரஹீம், கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் கொழும்பில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய நீர்நிலைப் போட்டிகளில் தலா 5 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். இம்முறை நடைபெற்ற தேசிய குறுந்தூர நீச்சல் போட்டித் தொடரின் திறந்த வயதுப்பிரிவில் தான் பங்குபற்றிய 4 போட்டிகளிலும் புதிய தேசிய சாதனை படைத்திருந்தார்.

இவை அனைத்திற்கும் மேலாக, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளம் வயதிலேயே, கடந்த வருடம் நடைபெற்ற றியோ ஒலிம்பிக் போட்டிகளில் கிமிகோ ரஹீம் கலந்துகொண்டிருந்தமையும் நினைவு கூறத்தக்கது.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரில் ஆண்களுக்கான கனிஷ்ட பிரிவில் கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த எல்வின் அருள்மாரன், 4 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இதன்படி, 100 மற்றும் 200 மீற்றர் சாதாரண நீச்சல், 50 மற்றும் 100 மீற்றர் பிரஸ்ட் ஸ்டோக் நீச்சல் ஆகிய போட்டிகளிலும் அவர் இவ்வாறு தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்தில் தங்கம் வென்ற மாவனல்லை இளம் வீர்ர ரஹீப்

15 வருடங்களுக்குப் பிறகு மாவனல்லை சாஹிராவுக்கு..

இதேவேளை, இலங்கை நீச்சல் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான கைல் அபேசிங்க, ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

இந்நிலையில், இம்முறை போட்டித் தொடரின் திறந்த வயதுப் பிரிவுகளில் ஆண்கள் பிரிவின் சம்பியனாக நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் டிலாகவும், பெண்கள் பிரிவின் சம்பியனாக கில்லர் வேல்ஸ் கழகத்தைச் சேர்ந்த கிமிகோ ரஹீமும் தெரிவாகினர்.

அத்துடன், கனிஷ்ட பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் சம்பியன்களாக கொழும்பு கேட்வே கல்லூரியின் எல்வின் அருள்மாரண் மற்றும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சஸ்னா மாஹிரும் தெரிவாகியிருந்தனர்.