எதிர்பார்த்த அடைவுமட்டங்களை பெறத் தவறிய கனிஷ்ட மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகள்

161

இந்த வருடத்தின் முதலாவது சர்வதேச மெய்வல்லுனர் தொடராக எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஹொங்கொங்கில் 3ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது. இந்த போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் சனிக்கிழமை (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தன.  

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிகள் 19ஆம் திகதி முதல் கொழும்பில்

மெய்வல்லுனர் விளையாட்டைப் பொருத்தமட்டில் …

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் இந்த ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது மெய்வல்லுனர் போட்டித் தொடர் இதுவென்பதால் நாடளாவிய ரீதியில் இருந்து 18 வயதுக்கு கீழ்ப்பட்ட முன்னணி கனிஷ்ட வீரர்கள் இந்த தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்மூலம் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான உத்தேச அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்கின்ற சகல வீரர்களுக்கும், குறித்த உத்தேச அடைவுமட்டத்தினை அண்மித்ததாக திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஏழு வீரர்களுக்கும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபெற வாய்ப்பு வழங்குவதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் முன்னர் தெரிவித்திருந்தது.

எனினும், சனிக்கிழமை இடம்பெற்ற பெரும்பாலான தகுதிகாண் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு வீர, வீராங்கனைகள் உத்தேச அடைவுமட்டத்தினை  அடைய தவறியிருந்த போதிலும் சில வீர, வீராங்கனைகளினால் சிறந்த பதிவுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த மெய்வல்லுனர் தொடரில் முதலாவதாக, வேக நடைக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் வேக நடையில் 47 நிமிடங்கள் மற்றும் 30 செக்கன்கள் உத்தேச அடைவு மட்ட நேரமாக கருதப்பட்டதோடு, பெண்களுக்கான 5,000 மீற்றர் வேக நடையில் 26 நிமிடங்கள் கருதப்பட்டிருந்தது.

Photo Album :  Junior National Trials

வேக நடை தகுதிகாண் போட்டிகளை வீர, வீராங்கனைகள் உற்சாகத்தோடு ஆரம்பித்த போதிலும் உத்தேச அடைவுமட்டத்தினை இருபாலாரும் அடையத் தவறியிருந்தனர். ஆண்களுக்கான வேகநடையில் சிறந்த பதிவாக பிலிமதலாவ மத்திய கல்லூரியின் RGIN. நரம்பனாவ மூலம் 58 நிமிடங்கள் மற்றும் 58.79 செக்கன்கள் பதியப்பட்டது. பெண்களுக்கான வேக நடையின் சிறப்பான பதிவு அதே பிலிமதலாவ மத்திய கல்லூரியின் வீராங்கனை SBSNK. செனவிரத்ன மூலம் 43 நிமிடங்கள் மற்றும் 3.08 செக்கன்கள் எனப் பதியப்பட்டது.

கொழும்பு புனித பேதுரு கல்லூரி வீரர் ருமேஷ் தரங்க சிறந்த பதிவை மேற்கொண்டு 3ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தன்னை தகுதிபெறச் செய்துகொண்டார். குறித்த போட்டியில் அடைவு மட்டமாக 51 மீற்றர் வழங்கப்பட்டிருந்த போதும், ருமேஷ் 51.90 மீற்றர் துரத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதேநேரம், குண்டு போடுதல் நிகழ்ச்சிக்கான உத்தேச அடைவுமட்ட தூரத்தினையும் (ஆண்கள் – 18 மீற்றர், பெண்கள் – 14 மீற்றர்) இரு பாலாரும் அடையத் தவறியிருந்தனர். ஆண்களுக்கான குண்டு போடுதல் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் S. மிதுன்ராஜ் 13.62 மீற்றர் தூரத்திற்கு குண்டினைப் போட்டு அதிகபட்ச தூரத்தினை பதிவு செய்ததோடு, பெண்கள் பிரிவில் கொழும்பு மகளிர் கல்லூரி வீராங்கனை சரிஷா குணரத்ன 12.08 மீற்றர் தூரம் போட்டு அதிக தூரத்தை தொட்ட வீராங்கனையாக மாறியிருந்தார்.

வட மாகாண வீரரான S. மிதுன்ராஜ் குண்டு போடுதல் மட்டுமல்லாது தட்டெறிதல், ஈட்டி எறிதல், சம்மெட்டி எறிதல் போன்ற மைதான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தெருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மைதான நிகழ்ச்சிகளின் உத்தேச அடைவுமட்டங்களை மிதுன்ராஜ் அடையத்தவறிய போதிலும் அவர் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த ஏனைய வீரர்களுடன் ஒப்பிடும் போது சிறப்பான பதிவுகளையே காட்டியிருந்தார்.

தேசிய விளையாட்டுப் பேரவையின் புதிய அங்கத்தவர்கள் நியமனம்

இலங்கையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காவும்,…

அந்தவகையில் தட்டெறிதலின் போது மிதுன்ராஜ் 43.40 மீற்றர் தூரம் தொட்டதோடு (உத்தேச அடைவுமட்டம் – 51 மீற்றர்), ஈட்டி எறிதலில் 55.39 மீற்றர் தூரத்தினையும் (உத்தேச அடைவுமட்டம் – 70 மீற்றர்), சம்மெட்டி எறிதலில் 38.85 மீற்றர் தூரத்தினையும் (உத்தேச அடைவுமட்டம் – 68 மீற்றர்) தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

S. மிதுன்ராஜ் தவிர வட, கிழக்கு மாகாணங்களில் இருந்து மிகவும் குறைவான வீர, வீராங்கனைகளே இந்த மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளில் பங்கெடுத்திருந்தனர். இதேநேரம், தகுதிகாண் போட்டிகளில் கலந்து கொண்ட ஏனைய வீரர்களில் எவரும் மைதான நிகழ்ச்சிகளான ஈட்டி எறிதல், சம்மெட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போன்றவற்றில் உத்தேச அடைவுமட்டத்தினை தாண்டியிருக்கவில்லை.

இதேவேளை, கோலூன்றிப் பாய்தல் தகுதிகாண் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் மொத்தமாக இரண்டு வீர, வீராங்கனைகளே கலந்து கொண்டனர். இரண்டு வீர, வீராங்கனைகளும் யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியினைச் சேர்ந்தவர்கள். அதில் ஆண் வீரரான S. ஜாம்சன்  3.70 மீற்றர் உயரம் தாவியதுடன், பெண்கள் பிரிவில் P. ரத்துஷிகா 2.60 மீற்றர் உயரம் தாவியிருந்தார். எனினும், இந்த இருவரும் உயரம் பாய்தலுக்கான உத்தேச அடைவுமட்ட உயரத்தினை (ஆண்கள் – 4.70 மீற்றர், பெண்கள் – 3.50 மீற்றர்) தாண்ட தவறியிருந்தனர்.

கோலூன்றிப் பாய்தல் ஒருபுறமிருக்க உயரம் பாய்தலில் சிலாபம் புனித மரியாள் கல்லூரியின் வீரர்களில் ஒருவரான ரொஷான் தில்மேனி 2 மீற்றர் உயரம் தாவி உத்தேச அடைவு மட்டமான 2.06 மீற்றரை அண்மித்திருந்ததோடு, பெண்கள் பிரிவில் இப்பாகமுவ மத்திய கல்லூரியின் PPIN. பல்லேகம 1.68 மீற்றர் உயரம் தாவி உத்தேச அடைவுமட்ட உயரமான 1.71 மீற்றரினை மிகவும் நெருங்கியிருந்தார்.

அதோடு, ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் ஹிருஷ ஹாஷேன் 7.11 மீற்றர் பாய்ந்து உத்தேச அடைவு மட்ட நீளமான 7.20 மீற்றர் தூரத்தை நெருங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உயரம் பாய்தல் தவிர பெண்களுக்கான முப்பாய்ச்சலிலும் உத்தேச அடைவு மட்டமாக 11.25 மீற்றர் கருதப்பட்டிருந்ததுடன், ஆண்களுக்கு 14.90 மீற்றர் தூரம் கருதப்பட்டிருந்தது. இதில் ஆண்கள் பிரிவில் முப்பாய்ச்சல் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றியிருந்த  கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் கயான் தர்ஷன 14.21 நீளம் பாய்ந்து உத்தேச அடைவு மட்டத்தினை அண்மித்திருந்ததுடன் தம்புத்தேகம மத்திய கல்லூரியின் NAY. செவ்வந்தி 11.25 நீளம் பாய்ந்து பெண்கள் பிரிவில் சிறந்த பதிவினை நிலைநாட்டியிருந்தார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளின் உத்தேச அடைவுமட்ட நேரமாக 10.88 செக்கன்கள் கருதப்பட்ட காரணத்தினால், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத் தொடரினை 10.8 செக்கன்களில் நிறைவு செய்த சிலாபம் மரியாள் கல்லூரியின் மற்றுமொரு வீரரான செனால் மிலிந்த பெரேரா, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பங்குபெறும் வாய்ப்பினை நேரடியாகப் பெற்றுக் கொண்ட வீரர்களில் ஒருவராக மாறினார்.  இதேநேரம் பெண்கள் பிரிவில் 100 மீற்றர் தூரத்தினை 12.26 செக்கன்கள் நேரத்தில் நிறைவு செய்த கேட்வே கல்லூரியின் சதீபா ஹேடர்சன் 0.01 செக்கன்கள் வித்தியாசத்தில் அடைவு மட்டத்தினை தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஏழு கண்டங்களிலும் மரதன் ஓடிய முதல் இலங்கையராக ஹசன்

மரதன் ஓட்ட வீரரான ஹசன் எசுபலி (Hassan Esufally) மிகவும் ….

பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் தகுதிகாண் ஓட்டப் போட்டிகளில் கல்கமுவ மஹா வித்தியாலத்தினைச் சேர்ந்த BMHI. பஸ்நாயக்க 7 நிமிடங்கள் மற்றும் 34.57 செக்கன்களை எடுத்து உத்தேச அடைவுமட்ட நேரமான 7 நிமிடங்கள் மற்றும் 10 செக்கன்களை நெருங்கியிருந்தார்.

மறுமுனையில், ஆண்களுக்கான 2,000 மீற்றர் தடைதாண்டலினை மாதம்பை சேனநாயக்க மத்திய கல்லூரியின் GDLA. குருசிங்க 6 நிமிடங்கள் மற்றும் 15.36 செக்கன்களில் முடித்து உத்தேச அடைவு மட்ட நேரமான 6 நிமிடங்கள் மற்றும் 10 செக்கன்கள் தூரத்தினை நெருங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ருமேஷ் தரங்க, செனால் மிலிந்த பெரேராவினை தவிர நடைபெற்று முடிந்த தகுதிகாண் போட்டிகளில் வீர, வீராங்கனைகள் எதிர்பார்த்த உத்தேச அடைவு மட்டங்களை பெறத்தவறியிருப்பினும், தீர்க்கமான ஒரு முடிவு ஒன்றின் அடிப்படையில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் மூன்றாவது கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பங்குபெறும் இலங்கை வீர, வீராங்கனைகள் குழாத்தின் விபரம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<