இஸ்ஸடீன் மற்றும் அசிகுர் ரஹ்மான் ஆகியோரின் இரட்டை கோல்களின் உதவியுடன் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை 5-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியன் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழக அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.

கடந்த வாரம் இடம்பெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இஸ்ஸடீனின் ஹட்ரிக் கோலுடன் பலம் மிக்க கொழும்பு கால்பந்துக் கழகத்தை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது இராணுவப்படை அணி. அதேபோன்று, சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட ஜாவா லேன் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

FA கிண்ண இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள ஜாவா லேன் மற்றும் இராணுவ அணிகள்

இந்நிலையில் சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டி, கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இராணுவப்படை அணியினர் சற்று அதிகமாகவே எதிரணியின் பரப்பில் ஆதிக்கம் செலுத்தினர்.

பின்னர் பாசில் உள்ளனுப்பிய பந்தை பிரபல முன்கள வீரர் மொஹமட் இஸ்ஸடீன் கம்பங்களுக்குள் உதைந்து முதல் வாய்ப்பை கோலாக்கினார். இதன் காரணமாக ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இராணுவப்படைத் தரப்பு முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜாவா லேன் தரப்பினருக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஜானக ஷமிந்த பெற்றார். எனினும் அவர் உதைந்த பந்தின் மூலம் அவ்வணி வீரர்கள் பயன்பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இரு அணியினரும் சம பலத்துடன் விளையாடினர்.

மீண்டும் ஜாவா லேன் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது அவர்கள் சிறந்த முயற்சியை மேற்கொண்டனர். அலீம் உதைந்த பந்தை, சபீர் ஹெடர் மூலம் உள்ளனுப்ப நவீன் ஜுட் இறுதியாக கோல் முயற்சியை மேற்கொண்டார். எனினும் கோல் காப்பாளர் குமார சிறிசேன பந்தை வெளியே தட்டி விட்டார்.

தொடர்ந்து சஜித் குமார வேகமாக கோலை நோக்கி உதைந்த பந்தை ஜாவா லேன் கோல் காப்பாளர் தம்மிக்க செனரத் பிடித்துக்கொண்டார்.

பின்னர் ஜாவா லேன் அணியின் பின்கள வீரர் விட்ட தவறினால் பந்து இஸ்ஸடீனுக்கு வர, அவர் அதனை கோலை நோக்கி உதைந்தார். எனினும் பந்து கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்குள்ளேயே வந்தது.

இராணுவப்படை வீரர்களுக்கு கிடைத்த மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பின்போது, அவர்கள் தமது இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டனர். மதுஷான் டி சில்வா உள்ளனுப்பிய பந்தை அசிகுர் ரஹ்மான் சிறந்த முறையில் கோலாக்கினார்.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக முன்களத்தில் இருந்து பந்தைப் பெற்ற ஜாவா லேன் அணித்தலைவர் அப்துல்லா அதனை ஹெடர் முறையில் கோலுக்காக முயற்சித்தார். எனினும் பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

முதல் பாதி : இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 2 – 0 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி முதல் சில நிமிடங்களிலேயே படைத்தரப்பு தமது அடுத்த கோலையும் பெற்றது. மதுஷான் உதைந்த கோணர் உதையை, அசிகுர் ரஹ்மான் மிக அழகாக தலையால் முட்டி தனது இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இராணுவப்படை வீரர் புன்சர திருனவுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புக்களின்போது, அவர் சிறந்த நிறைவுகளை மேற்கொள்ளத் தவறினார்.

பின்னர், இளம் வீரர் சபீர், நவீட் ஜூட்டிற்கு சிறந்த முறையில் வழங்கிய பந்தை நவீனால் நிறைவு செய்ய முடியாமல் போனது.

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

இஸ்ஸடீன் வேகமாக பந்தை எடுத்துச் சென்று கோலுக்கு அண்மையில் வைத்து கோலை நோக்கி பந்தை உதைய முயற்சிக்கையில், சாமர டீ சில்வா அதனைத் தடுத்தார்.

எனினும் அதற்கு அடுத்த கனமே, சஜித் குமார தனக்கு கிடைத்த பந்தை வேகமாக கோலுக்குள் உதைய, இராணுவப்பபடை அணியின் நான்காவது கோல் பதிவானது.

அதனைத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு இரு அணியினரும் தம் தரப்பிற்கு கிடைத்த பல வாய்ப்புக்களையும் தவறவிட்டு வந்தன. குறிப்பாக ஜாவா லேன் வீரர் நவீன் ஜுட்டின் பல முயற்சிகளும் எதிரணியின் தடுப்பு வீரர்களால் முறியடிக்கப்பட்டன.

பின்னர், தன்னிடம் வந்த பந்தை கையால்வதில் கோல் காப்பாளர் தம்மிக்க செனரத் தவறுவிட, அதனை சாதகமாகப் பயன்டுத்தி இஸ்ஸடீன் மற்றொரு கோலைப் பெற்றார்.

எதிரணி 5 கோல்களால் முன்னிலையில் இருந்த வேளையில், போட்டியின் மேலதிக நேரத்தில் நவீன் ஜூட் ஜாவா லேன் அணிக்கான முதல் கோலைப் பெற்று, ஆதரவாளர்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்தார்.  

அதனைத் தொடர்ந்து ரிஸ்கானின் இறுதி உதையுடன், நடுவர் பிரஷான்த் ராஜ்கிறிஷ்னா FA கிண்ணத்தின் இறுதிப் போட்டி நிறைவடைவதற்கான சைகையைக் காண்பித்தார்.

முழு நேரம் : இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 5 – 1 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – அசிகுர் ரஹ்மான் (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)  

கோல் பெற்றவர்கள்
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் இஸ்ஸடீன் 12′ & 80′, அசிகுர் ரஹ்மான் 44’& 50′, சஜித் குமார 57′,
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – நவீன் ஜூட் 90+2′

மஞ்சள் அட்டை
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சஜித் குமார 38′, அசிகுர் ரஹ்மான் 45′,
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – தமயன்த குமார 67′, 

விருதுகள்
தொடரில் அதிக கோல் பெற்றவர் (தங்கப் பாதணி)
                            மொஹமட் இஸ்ஸடீன் – இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

தொடரின் சிறந்த கோல் காப்பாளர்
                          குமார சிறிசேன – இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்
                         அசிகுர் ரஹ்மான் – இராணுவப்படை விளையாட்டுக் கழகம்