IPL தொடரிலிருந்து விலகுவதாக ஜேசன் ரோய் அறிவிப்பு

Indian Premier League 2022

458

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) குஜராத் டைட்டண்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய், IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய், இம்முறை நடைபெற்ற IPL ஏலத்தில், 2 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்டிருந்தார். அத்துடன் குஜராத் டைட்டண்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இவர் செயற்படுவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

>> “சங்கா ஓய்வுபெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்” – அஸ்வின் <<

எவ்வாறாயினும் தொடர்ச்சியாக தன்னால்  கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருக்க முடியாது என்ற காரணத்திற்காக, இம்முறை IPL தொடரிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதேநேரம் தன்னை ஏலத்தில் வாங்கிய குஜராத் டைட்டண்ஸ் மற்றும் அந்த அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு தன்னுடைய நன்றிகளை ஜேசன் ரோய் தெரிவித்துள்ளதுடன், குடும்பத்துடன் தன்னுடைய நேரத்தை செலவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கான சரியான தருணம் இதுவென நினைக்கிறேன். இந்த ஆண்டு அதிகமான தொடர்கள் நடைபெறவுள்ளமையால் அதற்காக தயாராகவேண்டிய பணியையும் செய்யவேண்டியுள்ளது. நான் குஜராத் டைட்டண்ஸ் அணியின் அனைத்து போட்டிகளையும் பார்வையிட்டு, அணி கிண்ணத்தை வெல்வதற்கான ஆதரவை வழங்குவேன்” என சமுகவலைத்தளங்களில் ஜேசன் ரோய் பதிவிட்டுள்ளார்.

>> துடுப்பாட்ட தடுமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை? <<

ஜேசன் ரோய் கடந்த வருடம் மிச்சல் மார்ஷின் உபாதை காரணமாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இணைக்கப்பட்டிருந்தார். 2020ம் ஆண்டு டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக இணைக்கப்பட்ட இவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகினார். ஜேசன் ரோய் கடந்த 2017ம் ஆண்டு முதல் IPL தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், இதுவரை 13 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார்.

இவர் இறுதியாக பாகிஸ்தானில் நடைபெற்றுமுடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடியதுடன், ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 170.22 என்ற ஓட்ட வேகத்தில் 303 ஓட்டங்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<