ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணையும் இலங்கையின் முன்னணி வீரர்கள்!

Lanka Premier League 2021

169

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரமீயர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவகால போட்டிகளில், ஜப்னா கிங்ஸ் அணியில் திசர பெரேரா, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

LPL தொடரில் விளையாடும் அணிகள், கடந்த ஆண்டு தங்களுடைய அணிகளில் விளையாடிய நான்கு உள்நாட்டு வீரர்களை இம்முறை தொடர்ந்தும் தக்கவைக்க முடியும் என LPL நிர்வாகம் அறிவித்திருந்தது.

>>3ஆம் இலக்கத்தில் விளையாட மிகவும் விரும்புகிறேன் – சரித்

அதன்படி, கடந்த ஆண்டு ஜப்னா அணியை வழிநடத்தியிருந்த திசர பெரேரா, தொடர்ந்தும் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவருடன் வனிந்து ஹஸரங்க, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

வனிந்து ஹஸரங்க தற்போது, சர்வதேச ரீதியில் சிறந்த சகலதுறை வீரராக உள்ளார். ஐசிசியின் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளார். அதேநேரம், அவிஷ்க பெர்னாண்டோ T20 உலகக்கிண்ணத்தொடரில் நான்காம் இலக்க வீரராக பிரகாசித்துவருகின்றார்.

அதுமாத்திரமின்றி இளம் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் இறுதியாக நடைபெற்ற போட்டிகளில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திவருகின்றார்.  எனவே, இலங்கை அணியின் முன்னணி வீரர்களாக உள்ள இவர்கள் அனைவரையும் தக்கவைப்பதாக ஜப்னா கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டு வெளிநாட்டு வீரர்களை, வீரர்கள் வரைவுக்கு முன்னர், அணியில் இணைக்கமுடியும் என்ற அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தென்னாபிரிக்க வீரர் பாப் டு பிளெசிஸ் மற்றும் பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் ஆகியோரை ஜப்னா கிங்ஸ் அணி இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

T20 உலகக்கிண்ணத்தொடர் நிறைவடைந்த பின்னர், LPL தொடர், டிசம்பர் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப்போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>