ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 9ஆவது போட்டி நேற்று  மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்  ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியை எதிர் கொண்டது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரயினா முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்தது 143 ஓட்டங்களைப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக பார்த்திவ் படேல் 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 34 ஓட்டங்களையும், டிம் சவ்தி 11 பந்துகளில் 25 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 11 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர். குஜராத் லயன்ஸ் அணியின் சார்பாக பந்து வீச்சில் பிரவின் தம்பெ மற்றும் தவால் குல்கர்னி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை தம்மிடையே பங்குபோட டுவயின் பிராவோ, ஜேம்ஸ் போல்க்னர்  மற்றும் சதப் ஜகாதி ஆகியோர் தலா 1 விக்கட் வீதம் தம்மிடையே பங்கு போட்டனர்.

பதிலுக்கு 144 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி குறிப்பிடப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்த நிலையில்  தனது வெற்றி  இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது  குஜராத் லயன்ஸ் அணி. இந்த அணி சார்பாக கடந்த 2 போட்டிகளிலும் பிரகாசித்த எரொன் பின்ஞ் மீண்டும் ஒரு முறை சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 7 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர்  அடங்கலாக 54 பந்துகளில் 67 ஓட்டங்களையும்,சுரேஷ் ரயினா 22 பந்துகளில் 27 ஓட்டங்களையும் அக்ஸ்டிப் நத் 11 பந்துகளில் 12 ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் பந்து வீச்சில் மிச்சல் மெக்லனகஹன் 4 விக்கட்டுகளையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 2  விக்கட்டுகளையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி குஜராத் லயன்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக செயற்பட்ட  எரொன் பின்ஞ் தெரிவு செய்யப்பட்டார்.