மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது லிவர்பூல்: மெஸ்ஸியின் கோலால் பார்சிலோனா வெற்றி

73

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (7) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு.

22 நாடுகளின் பங்கேற்புடன் AFC கற்கை இலங்கையில் வெற்றிகரமாக நிறைவு

ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) கால்பந்து…..

லிவர்பூல் எதிர் AFC போர்ன்மௌத்

மொஹமட் சலாஹ் மற்றும் சாடியோ மானேவின் கோல்கள் மூலம் போர்ன்மௌத் அணிக்கு எதிரான போட்டிகளில் லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

லிவர்பூல் அணி முந்தைய ப்ரீமியர் லீக் போட்டியில் வட்போர்டிடமும் எப்.ஏ. கிண்ணத்தில் செல்சியிடமும் தோற்ற நிலையில் இந்த போட்டியில் தனது வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியுடனேயே களமிறங்கியது. 

இந்த வெற்றியுடன் லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக்கில் 25 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி கடந்த 30 ஆண்டுகளில் முதல் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இன்னும் மூன்று போட்டிகளில் வென்றால் போதுமானதாகும்.   

தனது சொந்த மைதானமான ஆன்பீல்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லிவர்பூல் 9 ஆவது நிமிடத்திலேயே கோல் விட்டுக்கொடுத்து நெருக்கடியை சந்தித்தது. ஜெபர்சன் லெர்மா பரிமாற்றிய பந்தை பெற்ற கலும் வில்சன் போர்ன்மௌத் சார்பில் கோல் பெற்றார். 

எனினும் தனது 100 ஆவது லீக் போட்டியில் களமிறங்கிய எகிப்தின் மொஹமட் சலாஹ், சாடியோ மானே தடுமாற்றத்துடன் மரிமாற்றிய பந்தைக் கொண்டு கோல் புகுத்தினார். சலாஹ் தனது 100 ப்ரீமியர் லீக் போட்டிகளிலும் 70 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து செனகல் வீரர் சாடியோ மானே 33ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் லிவர்பூல் முன்னிலை பெற்றதோடு அது அந்த அணியின் வெற்றி கோலாகவும் இருந்தது. 

இதன்படி லிவர்பூல் அணி தனது சொந்த மைதானத்தில் 55 லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிக்கிறது. இதனை விடவும் செல்சி மாத்திரமே தனது சொந்த மைதானத்தில் 86 போட்டிகளில் தோலியுறாத அணியாக சாதனை படைத்துள்ளது. 2004–2008 காலப்பிரிவிலேயே அந்த அணி இந்த சாதனையை படைத்தது.    


பார்சிலோனா எதிர் ரியல் சொசிடாட்

லியோனல் மெஸ்ஸி பிந்திய நேரத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம் ரியல் சொசிடாட் அணியை 1-0 என வென்ற பார்சிலோனா லா லிகாவில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.  

இதன்படி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ரியல் மெட்ரிட்டை விடவும் 2 புள்ளிகளால் பார்சிலோனா முன்னிலை பெற்றபோதும் ரியல் மெட்ரிட் இன்று (08) நடைபெறும் ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். 

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் பெறாத நிலையிலேயே 81ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ரொபின் லே நோர்மன்டின் கையில் பந்து பட்டதை அடுத்து கிடைத்த ஸ்பொட் கிக்கை மெஸ்ஸி கோலாக மாற்றினார்.   

சொசிடாட் அணிக்கு கோல் பெற பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோது அலெக்சாண்டர் அசாக் உதைத்த பந்து இலக்கு தவறி வெளியேறியது.  

எனினும், 95 ஆவது நிமிடத்தில் ஜோடி அல்பா நெருக்கடி இன்றி பந்தை வலைக்குள் செலுத்தி பார்சிலோனா இரண்டாவது கோலை பெற்றதாக நம்பப்பட்டபோதும் வீயோ நடுவர் உதவி மூலம் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.  


ஆர்சனல் எதிர் வெஸ்ட் ஹாம் யுனைடட்

வெஸ்ட் ஹாமின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பிந்திய நேரத்தில் அலெக்சான்ட்ரே லகசாட் பெற்ற கோல் மூலம் ஆர்சனல் அணி 1-0 என வெற்றியீட்டியது. 

போட்டியின் முதல் பாதியில் வெஸ்ட் ஹாம்மிற்கு கோல் பெறுவதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தபோதும் வலைக்குள் பந்தை செலுத்த முடியாதது அந்த அணிக்கு ஏமாற்றத்தை தந்தது. 

இந்நிலையில் மெசுட் ஒசில் பரிமாற்றிய பந்தைக் கொண்டு 78 ஆவது நிமிடத்தில் லகசாட் கோல் பெற்று ஆர்சனலின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி 9ஆவது இடத்திற்கு முன்னேறியதோடு அந்த அணி நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் 5 புள்ளிகளே பின்தங்கியுள்ளது. 


டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் பர்ன்லி

டெலி அலியின் பெனால்டி கோல் மூலம் பர்ன்லி அணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் வித்தியாசத்தில் சமன் செய்த டொட்டன்ஹாம் அணி ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை தவிர்த்துக்கொண்டது. 

போட்டியை அதிரடியாக ஆரம்பித்த பர்ன்லி 13 ஆவது நிமிடத்தில் இடது பக்க மூலையில் நெருக்கமான தூரத்தில் இருந்து கிறிஸ் வூட் பெற்ற கோல் மூலம் முன்னிலை பெற்றதோடு முதல் பாதியில் அதனைத் தக்கவைத்துக் கொள்ள அந்த அணியால் முடிந்தது.  

இந்நிலையில் இரண்டாவது பாதியில் இரண்டு மாற்றங்கள் செய்து ஆடிய டொட்டஹாம் அணிக்கு 50ஆவது நிமிடத்தில் ஸ்பொட் கிக் வாய்ப்பு கிடைத்தது. பெனால்டி பெட்டிக்குள் வைத்து எரிக் லமாலாவை, பென் மீ கீழே வீழ்த்த கிடைத்த பெனால்டி உதையை அலி கோலாக மாற்றினார்.   

இந்த போட்டி சமநிலை பெற்றதன் மூலம் டொட்டன்ஹாம் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எனினும் அந்த அணி நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் நான்கு புள்ளிகளே பின்தங்கியுள்ளது. 

மறுபுறம் கடந்த ஏழு போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிக்கும் பர்ன்லி பத்தாவது இடத்தில் உள்ளது. 

குறிப்பாக டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் மற்றும் பர்ன்லி அணிகள் விளையாடிய 100 ஆவது ப்ரீமியர் லீக் போட்டி இதுவாகும். இதுவரை 25 போட்டிகள் சமநிலை பெற்றிருப்பதோடு டொட்டன்ஹாம் 39 போட்டிகளிலும் பர்ன்லி 36 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<