இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸங்க பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி, அடுத்த மாதம் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
>>பந்துவீச்சாளர்களின் அபாரத்துடன் வடக்கின் பெரும் சமரை ஆரம்பித்த யாழ். மத்தி!
அந்தவகையில் இலங்கை டெஸ்ட் அணியின் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக செயற்பட்டுவரும் பெதும் நிஸ்ஸங்கவுக்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை பூரணமாக குணமடையாததன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறுதியாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற்றுமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பெதும் நிஸ்ஸங்க விளையாடிய போதும், முதுகுப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. குறிப்பிட்ட உபாதை இதுவரை குணமடையவில்லை என்பதால் அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பெதும் நிஸ்ஸங்க இலங்கை அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும், 44.90 என்ற ஓட்ட சராசரியில் 494 ஓட்டங்களை குவித்துள்ளார். இவ்வாறான நிலையில் இவரின் இழப்பு இலங்கை அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்வரும் 15 தொடக்கம் 19ம் திகதிவரை விளையாடவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23 தொடக்கம் 27ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<