“இலங்கை வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் நிலை அணி அல்ல” ; SLC

India tour of Sri Lanka 2021

609

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது, இரண்டாம் நிலை அணி இல்லையென இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள சில தரப்பினர், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது, இரண்டாம் நிலை அணி எனவும், இலங்கை கிரிக்கெட்டை அவமதிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் சபை இவ்வாறான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

LPL தொழிநுட்ப குழுவின் தலைவராக சரித் சேனாநாயக்க நியமனம்

இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை வந்துள்ள இந்திய அணி, பலம் வாய்ந்த அணியென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குழாத்தில் உள்ள 20 வீரர்களில், 14 வீரர்கள் இந்திய தேசிய அணியின் ஒருநாள், T20I மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். எனவே, இந்த குழாம், இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் நிலை அணி இல்லை எனவும், பலமான அணியெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. எனவே, இவ்வாறான குழாத்தை இந்திய கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய கிரிக்கெட் கலாச்சாரத்தில், ஒவ்வொரு அணிகளும், ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கும் தனித்தனியான அணிகளை உருவாக்கி வருகின்றன. இதில், வெவ்வேறு வீரர்களை அதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த இந்த செயற்பாடானது, ஒவ்வொரு வகையான போட்டிகளையும் பலப்படுத்தும் வகையில், இந்த தீர்மானங்களை கிரிக்கெட் சபைகள் மேற்கொண்டு வருகின்றன. அத்துடன், ஐசிசியின் தொடர்ச்சியான போட்டி அட்டவணைகள் காரணமாகவும், அணிகள் தனித்தனியான அணிகளை உருவாக்கி வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<