T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாம் அறிவிப்பு

46
India announced their T20 World Cup squad without Gill

அஜித் அகார்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழாம், 2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் கொண்ட இந்திய குழாத்தினை வெளியிட்டுள்ளது.

அத்துடன் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அதே குழாமே அதற்கு முன்னர் நியூசிலாந்துடன் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் பங்கெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>உலகக்கிண்ணத்துக்கான முதற்கட்ட இலங்கை குழாம் அறிவிப்பு<<

இதன்படி முக்கிய மாற்றங்களுடன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய T20 அணியில் முன்வரிசை அதிரடி துடுப்பாட்டவீரர் இஷான் கிஷன் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அதேநேரம், இந்திய T20 அணியின் பிரதி தலைவரும் நட்சத்திர வீரருமான சுப்மான் கில் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஜித்தேஷ் ஷர்மா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்திய T20 அணியில் இடம்பெறாமல் இருந்த இஷான் கிஷன், அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி உள்ளூர் T20 தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியமை அவருக்கான தேசிய அணி வாய்ப்பினை மீண்டும் பெற்றுக் கொடுத்துள்ளது.

அதேவேளை சுப்மான் கில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனுபவ சகலதுறைவீரரான அக்ஷார் பட்டேல் இந்திய T20 அணியின் புதிய பிரதி தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய குழாத்தின் வீரர்களை நோக்கும் போது ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங் போன்றோர் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக தக்கவைக்கப்பட்டுள்ளதோடு சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். அத்துடன் தமிழ் நாட்டைச் சேர்ந்த வொஷிங்டன் சுந்தர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடர் பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் என்பவற்றில் பங்கெடுக்கின்றது.

இந்திய குழாம்:

 

சூர்யகுமார் யாதவ் (தலைவர்), அக்ஷார் பட்டேல், இஷான் கிஷன் (வி.கீ), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வெர்மா, ஹார்திக் பாண்டியா, சிவம் துபே, வொஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<