பங்களாதேஷின் கோரிக்கை நிராகரிப்பு; ஐ.சி.சி. 24 மணி நேர அவகாசம்

ICC World T20 2026

3
TAMIL CRICKET NEWS

2026 T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) திட்டவட்டமாக நிராகரித்துள்ளதால், அந்த அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

>>பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முடிவுக்கு பாகிஸ்தான் ஆதரவு<<

பங்களாதேஷிற்கான T20 உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கடுமையான கோரிக்கையை பங்களாதேஷ் வைத்திருந்த நிலையில், தற்போது அது அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

புதன்கிழமை (21) நடைபெற்ற ஐ.சி.சி. இன் அவசரக் கூட்டத்தில், பங்களாதேஷின் கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் மட்டுமே வாக்களித்தது. 16 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.சி.சி இன் உறுப்பினர்களில், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, பங்களாதேஷிற்கு ஐ.சி.சி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது குறித்து பங்களாதேஷ் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்றும், தவறினால் அவர்களுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து குழு C இல் T20 உலக் கிண்ணத்திற்காக சேர்க்கப்படும் என ஐ.சி.சி அதிரடியாக அறிவித்துள்ளது.

>>இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் IFS நிறுவனம்<<

அதேநேரம் இந்திய கிரிக்கெட் செய்தி இணையதளமான கிரிக்பஸ் குறிப்பிட்டுள்ளதன் படி பங்களாதேஷ் வீரர்களுக்கு இந்தியாவில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவதை ஐ.சி.சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட சுதந்திரமான பாதுகாப்பு ஆய்வுகளில், வீரர்கள், இரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று ஐ.சி.சி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக இலங்கையில் விளையாடும் அயர்லாந்து அணியுடன் தங்கள் பிரிவை மாற்றிக்கொள்ள பங்களாதேஷ் முன்வைத்த யோசனையையும் ஐ.சி.சி நிராகரித்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஐ.பி.எல் தொடரில் பங்களாதேஷ் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் புறக்கணிக்கப்பட்டதை, தங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலோடு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தொடர்புபடுத்திப் பேசியது ஐ.சி.சி அதிகாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட ஐ.சி.சி இன் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர், “ஒரு வீரரின் உள்நாட்டு தொடர் விவகாரத்தை உலகக் கிண்ணத் தொடரின் பாதுகாப்புடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. முறையான பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் இந்திய அரசின் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பின்னரும் பங்களாதேஷ் முரண்டு பிடிப்பது தேவையற்றது,” என்று தெரிவித்தார்.

தற்போதைய T20 உலகக் கிண்ண அட்டவணைப்படி, பங்களாதேஷ் தனது முதல் மூன்று போட்டிகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7, 9 மற்றும் 14 ஆகிய திகதிகளில் முறையே மேற்கிந்தியத் தீவுகள், இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டும். பங்களாதேஷின் இறுதி லீக் போட்டி பெப்ரவரி 17ஆம் திகதி மும்பை வன்கடே மைதானத்தில் நேபாளத்திற்கு எதிராக நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<