முதலாவது ஹெரிடேஜ் டெர்பியில் வெற்றியை பதிவு செய்த ஹமித் அல் ஹுஸைன் கல்லூரி

161

2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பிய சூழலில் நடைபெற்ற முதல் ஹெரிடேஜ் டெர்பி (Heritage Derby) போட்டியில், ஹமித் அல் ஹுஸைன் கல்லூரி, ஸஹிரா கல்லூரியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

போட்டியின் தொடக்கத்திலிருந்து இரு அணிகளும் மிகவும் அதிரடியாக கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. 32வது நிமிடத்தில், ஹமித் அல் ஹுஸைன்அணியின் பசுல்தீன் அப்துல்லா, கோல் பெட்டியின் வெளியே இருந்து தொலை தூரத்தில் இருந்து அற்புதமான கோலைப் பதிவு செய்து அணிக்கு முன்னிலை கொடுத்தார். (ஹமித் அல் ஹுஸைன் 1 – 0 ஸஹிரா)

38வதுநிமிடத்தில், ஸஹிரா கல்லூரி ஒரு சிறந்த கோல் வாய்ப்பைப் பெற் றிருந்தாலும், ஹமித் அல் ஹுஸைன் அணியின் கோல்கீப்பர் அதை அபாரமாக தடுத்தார். 45வது நிமிடத்தில், ஹமித்அல் ஹுஸைன் அணி தமது இரண்டாவது கோலை அடித்து, முதல் பாதியை 2-0 முன்னிலையில் முடித்தது. (ஹமித் அல் ஹுஸைன் 2 – 0 ஸஹிரா)

இரண்டாம் பாதியில் ஸஹிரா அணி வீரர்கள் தமது முதல் கோலை அடிக்க முயற்சித்தனர். எனினும், 55வது நிமிடத்தில், அவர்கள் பெற்ற பிரீ கிக் வாய்ப்பை கோலாக்கத் தவறினர். 67வது நிமிடத்தில், ஸஹிரா அணி தங்களின் முதல் கோலை அடித்து கோல் கணக்கை 2-1 ஆக மாற்றியது. (ஹமித் அல் ஹுஸைன் 2 – 1 ஸஹிரா)

70வது நிமிடத்தில், ஹமித் அல் ஹுஸைன் கல்லூரி ஒரு பெனால்டி வாய்ப்பைப் பெற்றது. ஆனால் ஸஹிரா கல்லூரி கோல்கீப்பர் அதனை சிறப்பாக தடுத்தார்.

போட்டி நிறைவடையும் நேரத்தில், இரு அணிகளுக்கும் இடையில் பரபரப்பு அதிகரித்தது. கூடுதல் நேரத்தில் (90+ நிமிடம்), ஹமித் அல் ஹுஸைன்அணி தங்களின் மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது. (ஹமித் அல் ஹுஸைன் 3 – 1 ஸஹிரா)

இதே நேரத்தில், அவர்களின் பின்கள வீரர் மொஹமட் முர்ஷீத், ஸஹிரா வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக சிவப்பு அட்டையைப் பெற்றார்.

முழு நேர முடிவு:  ஹமித் அல் ஹுஸைன் கல்லூரி 3 – 1 சாஹிரா கல்லூரி