இலங்கை கால்பந்துக்கு கைகொடுக்கும் தொழிநுட்பம்

65

கொவிட்-19 வைரஸ் காரணமாக தங்களுடைய எதிர்கால திட்டங்களை தொழிநுட்பங்களை பயன்படுத்தி மேற்கொண்டு வருவதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொது செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.  

கொவிட்-19 காரணமாக சர்வதேச ரீதியாக விளையாட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளமை போன்று, இலங்கை கால்பந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன. இந்தநிலையில், அணியின் நடவடிக்கைகளை இணையம் மூலமாக மேற்கொள்ளும் திட்டம் ஒன்றினை இலங்கை கால்பந்து சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது.

போட்டி நெரிசல்: ஐந்து பதில் வீரர்களை பயன்படுத்த பிஃபா பரிந்துரை

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னரான அதிக நெரிசல் ……

இதன் முதற்கட்டமாக நடுவர்களை தயார்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றினை இணையம் மூலமாக ஆரம்பித்துள்ளதாக ஜஸ்வர் உமர் குறிப்பிட்டுள்ளார்.

“நடுவர்களுக்கான பயிற்சி நெறியொன்றினை வீடியோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஆரம்பித்துள்ளோம். இந்த நேரடி கலந்துரையாடலில் 30 நடுவர்கள் வரை கலந்துக்கொண்டுள்ளனர். இதன் மூலம் உண்மையான போட்டி தருணங்களை ஆராய்வது மாத்திரமின்றி, போட்டிக்கான சட்ட திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படுகின்றன. 

குறித்த இந்த நேரடி கலந்துரையாடலில் ஈடுபடும் நடுவர்களுக்கு, பயிற்சிகள் வழங்கப்படும் என்பதுடன், அவர்களுக்கான பரீட்சையும் நடைபெறும். அதற்கான கால எல்லையும் அவர்களுக்கு வழங்கப்படும்”

பிஃபா 2022 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் தகுதிகாண் போட்டிகள் கொவிட்-19 காரணமாக தடைப்பட்டுள்ளன. இலங்கை அணி தங்களுடைய அடுத்த மூன்று தகுதிகாண் போட்டிகளில் முறையே வடகொரியா, தென் கொரியா மற்றும் லெபனான் போன்ற அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. எனினும், இந்தப் போட்டிகளுக்கான திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேநேரம், இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படவிருந்த,  புதிய சுப்பர் லீக் தொடர் மற்றும் தொழில் ரீதியான கால்பந்து தொடர் போன்றவை இவ்வருட இறுதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

“ஏனைய ஆயத்தனங்களை போன்று எமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எமது போட்டிகள்,  தேசிய அணியின் பயிச்சிகள், இளையோருக்கான போட்டிகள், மகளிர் கால்பந்து போட்டிகள், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் நடுவர்களுக்கான பயிற்சிகள் என்பவையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்,  நாட்டின் நிலைமை முன்னேற்றத்தை காணும் பட்சத்தில் அதற்கான திட்டங்களை நாம் வகுப்பதற்கு தயாராக உள்ளோம்”

இலங்கை கால்பந்து கழகங்கள், வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான ஆலோசனையை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம், பிஃபா அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஜஸ்வர் உமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாம் கால்பந்து கழகங்கள், வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான ஆலோசனையை பிஃபாவுக்கு வழங்கியுள்ளோம். அவர்கள் அதுதொடர்பில் சிந்தித்து நல்ல முடிவொன்றை அடுத்த வாரம் அளவில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நல்ல முடிவொன்று கிடைத்தால், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க முடியும்” என்றார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம், தற்போது பயிற்றுவிப்பாளர்களுக்கான சான்றிதழ் பயிற்சிநெறியொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சிநெறியும் வீடியோ தொழிநுட்பம் மூலமாக மேற்கொள்ளப்படும். அதேபோன்று, இவ்வருட இறுதியில் இதற்கான பரீட்சையும் இணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் என்பதுடன், நேர்முக பரீட்சையும் நடைபெற்று, சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  >> மேலும் கால்பந்து செய்திகளை படிக்க <<