துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மே.தீவுகள் வீரர்

SA20 League

431
Fabian Allen

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை கிரிக்கெட் வீரரான ஃபேபியன் அலெனை துப்பாக்கி முனையில் கடத்தி கையடக்கத் தொலைபேசி மற்றும் பை உள்ளிட்ட அவரது உடமைகள் திருடப்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்ற SA20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர்களான ஃபேபியன் அலென் பார்ல் றோயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இந்த நிலையில் நாளை (7) நடைபெறவுள்ள எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்பதற்காக பார்ல் றோயல்ஸ் அணி இன்று (6) ஜொஹனஸ்பேர்க் வந்திருந்தது. 

இதன்போது ஜொஹனஸ்பேர்க்கில் உள்ள தங்கும் விடுதிக்கு ஃபேபியன் அலென் சென்றபோது, விடுதிக்கு வெளியே, சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்தி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றதும், அவரிடம் இருந்த கையடக்கத் தொலைபேசி, பணம், அவரது தனிப்பட்ட டையரி, பை போன்ற பொருட்களை வழிப்பறி செய்துவிட்டு, தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 

குறிப்பாக, சர்வதேச T20 லீக் தொடரொன்றில் விளையாடும் வீரருக்கு பாதுகாப்பு இருந்தும் அவர்களை மீறி இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறி உள்ளது. அதுவும், அந்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நிலையிலும், அவர்களுக்கு தெரியாமல் இந்த சம்பவம் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்த செய்தி ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலாகின. இருப்பினும், தென்னாபிரிக்கா T20 லீக் தொடர் நிர்வாகமும், பார்ல் றோயல்ஸ் நிர்வாகமும் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தன. இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை இதுகுறித்து தீவிர விசாரணையை நடத்தி, சம்பவம் நடைபெற்றது உண்மைதான் என அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘எமது அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரே கோலே, உடனே ஃபேபியன் அலெனை தொடர்ப்பு கொண்டார். அப்போது, சக வீரர் ஒபிட் மெக்கோய் ஆலனுடன் இருந்தார். ஃபேபியன் ஆலனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவரிடம் இருந்த பொருட்களை மட்டுமே வழிப்பறி செய்து இருக்கிறார்கள். தென்னாபிரிக்கா T20 லீக் தொடர் நிர்வாகமும், பார்ல் றோயல்ஸ் அணியும் ஆலனுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். நாங்களும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்எனக் கூறினார். 

எவ்வாறாயினும், பார்ல் றோயல்ஸ் அணி நிர்வாகமும் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இச் சம்பவத்தில் ஃபேபியன் அலெனிற்கு எந்த வித உடலியல் சேதங்களும் இல்லை எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை ஜொனஹஸ்பேர்க் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தென்னாபிரிக்கா T20 லீக் தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்து, பிளேஒப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில், பார்ல் றோயல்ஸ் அணி, எலிமினேட்டர் போட்டியில், ஜொஹனஸ்பேர்க் சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பெப்ரவரி 7ஆம் திகதி விளையாட உள்ளதுடன், பெப்ரவரி 10ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<