தென்னாபிரிக்க தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

104

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு தொடரான இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியின் 17 பேர் கொண்ட குழாம் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கின்றது. 

இலங்கையுடன் மோதவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின்…….

இங்கிலாந்து அணி இறுதியாக நியூசிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் தொடரை 1-0 என்ற அடிப்படையில் இழந்திருந்தது. இந்நிலையில் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகளுக்குமான இங்கிலாந்து அணியின் 17 பேர் கொண்ட குழாம் வெளியிடப்பட்டதற்கமைய இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் ஜோ ரூட் செயற்படவுள்ளார். 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்காக 15 பேர் கொண்ட குழாம் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அதிலிருந்து ஒரு வீரர் மாத்திரம் நீக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று அனுபவ வீரர்கள் தென்னாபிரிக்க தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் இணைக்கப்பட்ட 22 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாகிப் மஹ்மூத் இவ்வாறு குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்ட அணியின் முக்கிய அனுபவ வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன், ஆஷஷ் டெஸ்ட் தொடரின் பின்னர் மீண்டும் இங்கிலாந்து குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் அண்டர்சன் 149 டெஸ்ட் போட்டிகளில் 575 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

PSL 2020: லாஹூர் அணியில் இலங்கை சீக்குகே பிரசன்ன

அடுத்த வருடம் (2020) நடைபெறவுள்ள……

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரராக இடம்பிடித்திருக்கும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜொனி பெயர்ஸ்டோ, ஆஷஷ் தொடரின் பின்னர் மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார். ஜொனி பெயர்ஸ்டோ 69 டெஸ்ட் போட்டிகளில் 4,020 ஓட்டங்களை குவித்துள்ளார். 

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் டெஸ்ட் அறிமுகம் பெற்று இதுவரையில் 13 போட்டிகளில் 36 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட், 10 மாதகால இடைவெளியின் பின்னர் தற்போது தென்னாபிரிக்கா பயணிக்கும் இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இதேவேளை நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்ட ஷக் க்ரௌலி தொடர்ந்தும் குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த மெத்யூ பிரகின்சன் தொடர்ந்தும் இங்கிலாந்து குழாமில் இடம்பெற்றுள்ளார். 

மொயின் அலி மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் தொடர்ந்தும் இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் 17 பேர் கொண்ட குழாம். 

ஜோ ரூட் (அணித்தலைவர்), ஜேம்ஸ் அண்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயர்ஸ்டோ, ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பெர்ன்ஸ், ஜொஸ் பட்லர், ஷக் க்ரௌலி, சாம் கரண், ஜோ டென்லி, ஜெக் லீச், மெத்யூ பிரகின்சன், ஒல்லி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<