நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் டக் பிரேஸ்வெல், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக விலா எலும்புப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.
2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரேஸ்வெல், அதே ஆண்டு ஹோபார்ட்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு வரலாற்றுச் வெற்றியைப் பெற்றுத் தந்தது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
எனவே, நியூசிலாந்து அணிக்காக 2011ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை டக் பிரேஸ்வெல் விளையாடியுள்ளார். இதில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் துடுப்பாட்டத்தில், 568 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 26 விக்கெட்களையும், சர்வதேச T20I போட்டிகளில் 20 விக்கெட்டுகள் என சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 120 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். துடுப்பாட்டத்தில் 915 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
- ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசிலாந்து வீரர்
- நியூசி. அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் கேரி ஸ்டெட்
அதேபோல, டக் பிரேஸ்வெல் முதல் தர கிரிக்கெட்டில் 4,000 ஓட்டங்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் என்ற இரட்டைச் சாதனையைப் படைத்த வெகு சில சகலதுறை வீரர்களில் ஒருவராவும் இடம்பிடித்துள்ளார். இது தவிர, 2012 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார். அண்மையில் தென்னாப்பிரிக்காவின் SA20 லீக்கில் ஜோபர்க் சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவரது 17 ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் பங்களிப்பிற்கு நியூசிலாந்து கிரிக்கெட் சபை தனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
‘எனது பயணம் முழுவதும் ஆதரவாக இருந்த பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி,’ என்று 35 வயதான டக் பிரேஸ்வெல் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டக் பிரேஸ்வெல் ஓய்வு பெற்ற அதே நேரத்தில், அவரது சகோதரர் மைக்கேல் பிரேஸ்வெல் இம்மாதம் நடைபெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<



















