2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டி விசாரணை பற்றி சங்கக்கார

1348

கடந்த 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறப்பட்ட விடயம் தொடர்பிலான விசாரணைகளுக்கு முகம்கொடுத்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, குறித்த விசாரணைகள் பற்றி இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹார்ஷ போக்லவிடம் மனம் திறந்திருக்கின்றார். 

இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே 2011 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். 

ரிச்சட்ஸ்-போத்தம் கிண்ணமாக மாற்றமடையும் விஸ்டன் கிண்ணம்!

இந்த குற்றச்சாட்டினை அடுத்து குறித்த உலகக் கிண்ண இறுதிப் போட்டி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம் செய்யப்பட்டிருந்ததுடன், விசாரணைகளின் முடிவில் முன்னாள் விளையாட்டு அமைச்சரின் குற்றச்சாட்டினை வலுப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. 

இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வாக்குமூலம் வழங்கியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 

”விளையாட்டு அமைச்சரின் அற்பமான குற்றச்சாட்டை அடுத்து நாங்கள் கேள்விகளுக்கு முகம்கொடுத்து, வாக்குமூலமும் வழங்கினோம். இது ஏமாற்றமாகவும், சில நேரங்களில் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கின்றது.

அரசியல் என்று வரும் போது, உங்களிடம் பழக்கவழக்க ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஊழல்வாதிகள் இருக்கும் போதும், அவர்களுக்கு விளையாட்டு தொடர்பான உத்தியோகபூர்வ பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டிருக்கும் போதும் இவை அனைத்தும் உங்களுக்கு எங்கிருந்து வருகின்றன என்பது புரியும். இந்நிலையில் நீங்கள் அவர்களது நோக்கங்கள் பற்றியதான இரண்டாம் யோசனைக்குச் செல்லத் தேவையில்லை.” 

குமார் சங்கக்கார தவிர ஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணைகளுக்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய மஹேல ஜயவர்தன மற்றும் உபுல் தரங்க போன்ற இலங்கை வீரர்களும் அழைக்கப்பட்டிருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளரான அரவிந்த டி சில்வாவும் வாக்குமூலம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐ.பி.எல். போட்டிகளுக்கான திகதிகள் அறிவிப்பு

இதேநேரம் ஆட்ட நிர்ணய விசாரணைகளுக்கு முகம்கொடுத்த விடயம் தொடர்பில் மேலும் கதைத்திருந்த குமார் சங்கக்கார இவ்வாறான விசாரணைகளுக்கு முகம்கொடுப்பது கிரிக்கெட் விளையாட்டின் உண்மைத்தன்மையை தொடர்ந்து பேணுவதற்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

”உண்மையில், அது நானோ, தேர்வாளர்களோ, மஹேலவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் (ஆட்ட நிர்ணயம் தொடர்பான) அந்த கேள்விகளுக்கு பதில் தருவதும், வாக்குமூலம் வழங்குவதும் (கிரிக்கெட்) விளையாட்டுக்கு ஆரோக்கியமான விடயமாகும். இது விளையாட்டினை உண்மையாக மதிப்பது என்னவென்பதை மக்களுக்கு விளக்கும் ஒரு செயன்முறையாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்மைத்தன்மையுடன் இருப்பவர்களும், மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர்களுமே தேவை.”

அதேநேரம், முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த 2011 ஆம் ஆண்டினுடைய கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டி இந்தியாவின் மும்பை வாங்கடே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றிருந்ததோடு, குறித்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி 28 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண வெற்றியாளர்களாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<