டான் கிண்ண சம்பியனானது ஏறாவூர் இளம்தாரகை

437

மட்டக்களப்பு  மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரணையோடு நடாத்திய மாவட்டத்தின் பிரிவு ஏ (டிவிஷன் A) அணிகளுக்கு இடையிலான “டான் கிண்ண” கால்பந்து தொடரின்  இறுதிப் போட்டியில் இரண்டாவது பாதி கோல்களின் மூலம் ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக் கழகம் (YSSC) மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினை 02 – 00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டு தொடரின் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இன்று (27) மாலை 4.00 மணிக்கு இடம்பெற்ற இந்த டான் கிண்ண இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட நடப்பு சம்பியன் அணியான ஏறாவூர் இளம்தாரகை அணியினரை எதிர்த்து மட்டுநகர் அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி மேதியிருந்தது.

இத்தொடரின் போட்டிகளில் சீலாமுனை இளம்தாரகை அணியை எதிர்த்து அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் 2 – 0 என்ற கோல்கள் கணக்கிலும் மட்டக்களப்பு இக்னேஸியஸ் அணியினரை எதிர்த்து ஏறாவூர் இளம்தாரகை அணியினர் 2-0 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிபெற்றிருந்தனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு கால்பந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்பத்திலேயே இளம்தாரகை அணியின் முன்கள வீரரான அனஸ் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பொன்றை நழுவவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் சத்தியராஸ் பரிமாற்றம் செய்த பந்தை எல்லைதாண்டிய நிலையில் நின்றுகொண்டிருந்த கஜமுகன் மூலமாக இளந்தாரகை அணிக்கெதிராக கோல் ஒன்று புகுத்தப்பட்ட போது அது ஒப் சைட் ஆக அறிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது, ரசிகர்களின் ஆர்வத்தையும் போட்டி பற்றிய எதிர்பார்ப்பையும் மேலும் தூண்டியது.

இளம்தாரகை அணியின் நடுக்கள வீரர் தஸ்லீம் வழங்கிய பந்தினை சிறப்பாக கட்டுப்படுத்தி முன்னேறிய வலதுபக்க முன்கள வீரர் அஹசன் 15 ஆவது நிமிடத்தில் கோல்கம்பத்தை நோக்கி உதைத்த பந்தினை மிக இலகுவான முறையில் விக்னேஸ்வரா கோல்காப்பாளார் பற்றிக்கொண்டார்.

ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் நடுக்களத்தில் வைத்து விக்னேஸ்வரா அணி முன்கள வீரரை முறையற்ற விதமாக மறித்த இளம்தாரகை வீரர் ஆதிலுக்கு நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கை வழங்கப்பட்டது.

தொடர்ந்தும் போட்டி சூடுபிடிக்க இளம்தாரகை முன்கள வீரர்களின் விரைவான பந்து பரிமாறல்களுக்கு தாக்குப்பிடிக்குமளவிற்கு விக்னேஸ்வரா அணியின் பின்கள வீரர்களான சிவராஜ் ராகுலன் மற்றும் விஸ்கரன் போன்றோர் அதிவேக தடுப்பை ஏற்படுத்தினர். இவ்வாறாக போட்டியின் முதல் பாதி 0 – 0 என நிறைவுற்றது.

முதல் பாதி: இளம்தாரகை விளையாட்டுக் கழகம் 0 – 0 விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதலே இளம்தாரகை அணியினரின் பக்கத்தை ஆக்கிரமித்த விக்னேஸ்வரா அணியினருக்கு இரண்டு வாய்ப்புக்கள் கிடைத்தும் இளம்தாரகை அணி கோல் காப்பாளார் அக்ரம் அவர்களின் அபாரமான கோல்காப்பினூடாக அதனை தடுத்து நிறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இளம்தாரகை அணியின் நடுக்கள வீரர் தஸ்லீம் மிகவேகமாக முன்கள வீரர் அனசுக்கு பந்தினை பரிமாற அதனை விக்னேஸ்வரா அணியின் தடுப்புக்களை உடைத்து உதைக்கப்பட்ட பந்தானது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை இளந்தாரகை அணி ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

தொடர்ந்தும் இளம்தாரகை அணியினரின் ஆட்டத்தில் நீண்டதூர பந்து பரிமாற்றங்களை மேற்கொள்ளத்தொடங்கிய முன்கள வீரர்களின் வியூகமானது இறுதியில் அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த காரணமாயிருந்தது.

ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் இளம்தாரகை அணி முன்கள வீரர் முஸ்தாக்கின் அனுபவமிக்க ஆட்டத்தின் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட பந்தை வேகமாக உதைத்து கோலாக்கினார்.  ஆட்டம் 1 – 0 என்ற கணக்கில் தொடர்ந்தது.

மீண்டும் ஆட்டம் முடிவுறும் நிலையை அடைய வேகமும் அதிகரித்தது. விக்னேஸ்வரா அணி முன்கள வீரர்களின் விடா முயற்சியை இளந்தாரகை அணி பின்கள வீரர்கள் முறியடித்தவண்ணம் இருந்தனர்.  ஆட்டத்தின் 86 ஆவது நிமிடத்தில் இளம்தாரகை அணி தலைவர் றிபாயிஸ் மூலமாக பின்களத்திலிருந்து அனுப்பப்பட்ட பந்து முன்கள வீரர் முஸ்தாக்கின் கால்களுக்கு கிடைக்க அதனையும் தனது அணிக்காக கோலாக மாற்றி 2 – 0 என்ற நிலைக்கு கொண்டுவந்தார். இறுதியில் முழு நேர முடிவில் 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் ஏறாவூர் இளம்தாரகை அணி வெற்றிபெற்றது.

முழு நேரம்: இளம்தாரகை விளையாட்டுக் கழகம் 2 – 0 விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்

2018 ஆம் ஆண்டிற்கான மட்டக்களப்பு மாவட்ட டான் கிண்ண கால்பந்தாட்ட சம்பியனாக ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகம் மகுடம் சூடியது.

கோல் பெற்றவர்கள்  

இளம்தாரகை விளையாட்டுக் கழகம் –  எம்.எம்.எம். முஸ்தாக் 80’ & 86’

விருதுகள்

இறுதிப்போட்டி ஆட்ட நாயகன்  – எம்.எம்.எம். முஸ்தாக் (இளம்தாரகை விளையாட்டுக் கழகம்)

சிறந்த கோல் காப்பாளர் – கே. சுபேசன் (விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்)

 சம்பியனான ஏறாவூர் இளந்தாரகை அணியினருக்கு பணப்பரிசாக ரூபா 2 இலட்சமும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாமிடம் பெற்ற விக்னேஸ்வரா அணிக்கு பணப்பரிசாக ரூபா 1 இலட்சமும் கிண்ணமும் வழங்கப்பட்டது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<